UPDATED : நவ 11, 2026 12:00 AM
ADDED : நவ 10, 2026 07:55 PM
கோவை: கடந்த ஆட்சியில், ஓய்வுபெற்ற சத்துணவு பணியாளர்கள் உயிரிழந்தால், இறுதிச்சடங்கு செலவுக்காக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவித்தபடி ஈமச்சடங்கு உதவித்தொகை வழங்கப்படுவதில்லை என புகார் எழுந்தது.
இதுகுறித்து நமது நாளிதழிலும் செப்., 10, அக்.27 என தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஒருமுறை உதவித்தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். இதற்காக, 4,456 பயனாளிகளைக் கணக்கிட்டு ரூ.8.91 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 1,500 பேர் உயிரிழக்கக்கூடும் என கணக்கிடப்பட்டு, அவர்களுக்கான இறுதிச்சடங்கு உதவித்தொகை வழங்க ஆண்டுதோறும் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த உதவித்தொகையை சமூக நலத்துறை வாயிலாக உரிய நடைமுறைகளைப் பின்பற்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
