ADDED : மே 11, 2025 12:14 AM

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், பணிகளுக்காக வந்துள்ள ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல், ஆண்டுகணக்கில் தங்கி வருகின்றனர்.
கோவை தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், விவசாயம் முதன்மை தொழிலாக உள்ளது. அடுத்தபடியாக, பாக்கு உற்பத்தியும், கட்டுமான பணிகளும் உள்ளது.
சிறு அறையில் பலர்
பாக்கு உற்பத்தி செய்யும் பணிக்காக, 20 ஆண்டுகளுக்கு முன்பு, அசாம் மாநிலத்தில் இருந்து ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் இங்கு அழைத்து வரப்பட்டு, பணியில் அமர்த்தப்பட்டனர். பாக்கு உற்பத்தி செய்யும் இடத்திலேயே, சிமென்ட் ஷீட் கொண்டு உருவாக்கப்பட்ட சுமார், 6 அடி அகலம், 10 அடி நீளம் கொண்ட அறைகளில், தங்க வைக்கப்பட்டனர்.
தற்போதும், அங்கேயே தங்கி பெண்களும் ஆண்களும் கட்டுமான பணிகள் மற்றும் இதர கூலி வேலைகளுக்கு சென்று வருகின்றனர்.
இதைத்தவிர, சிலர் காலியிடங்களில், சிமென்ட் ஷீட் கொண்டு அறைகள் உருவாக்கி, ஒரு நபருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் வாடகைக்கு அமர்த்தியுள்ளார்.
ஒவ்வொரு பாக்கு ஷெட் மற்றும் தனியார் ஷெட்களில், சுமார் 10 முதல் 20 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஒரு குடும்பத்தில், 4 பேர் இருந்தால், 4 ஆயிரம் ரூபாய் வாடகை வீதமும், அதைத்தவிர, மின் கட்டணமாக மாதந்தோறும், 200 ரூபாயும் வசூலித்து வருகின்றனர்.
இத்தனை அறைகளுக்கும், ஒரே மின் இணைப்பில் இருந்தே மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. உரிமையாளர்கள், முறையாக குடிநீர் வசதி, குளியலறை, கழிப்பறை போன்ற வசதிகள் ஏற்படுத்தாமல், 10 குடும்பங்களுக்கும், ஒரே குளியலறை, கழிப்பறை மட்டுமே ஏற்படுத்தியுள்ளனர்.
இடப்பற்றாக்குறை காரணமாக, வடமாநிலத்தொழிலாளர்கள் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு, நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது.
பொது குடிநீர் குழாயில், குடிநீர் தேவைக்கு நீர் பிடிக்கின்றனர். இதுபோன்று, அமைக்கப்பட்டுள்ள ஷெட்கள் மூலம் வருமானம் பெறும் உரிமையாளர்கள், இதற்காக, அரசிற்கு எந்த வரிகளும் செலுத்துவதில்லை.
தகவல்கள் இல்லை
தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்களுக்கும், அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து தருவதில்லை. ஆனால், பணப்பலன் மட்டும் பெற்று வருகின்றனர். ஒவ்வொரு ஷெட்களிலும் எத்தனை பேர் தங்கியுள்ளனர், யார், யார் தங்கியுள்ளனர் என்ற விபரங்கள், பேரூராட்சி நிர்வாகங்களிடமும், போலீசாரிடமும் இல்லை.
இதனால், அவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் கிடைக்காமலும், போதிய பாதுகாப்பு கிடைக்காமலும் உள்ளனர். வாடகை வசூலிக்கும் இடங்களில், வரிகளும் செலுத்தாமல் உள்ளதால், அரசுக்கும் வருமான இழப்பு ஏற்படுகிறது.
ஏற்கனவே, பேரூராட்சி நிர்வாகங்களில், 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையிலேயே, சிறுவாணி குடிநீர் பெற்று, அனைவரும் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.
வரி விதிக்க வேண்டும்
இதுபோல், வரி செலுத்தாமல், உரிமையாளர்கள் மட்டும் பலன் பெறும் வகையில் செயல்படுவதால், ஆயிரக்கணக்கில் உள்ள வடமாநில தொழிலாளர்களின் குடிநீர் தேவையை, பேரூராட்சிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளன.
எனவே, தொழிலாளர் நலத்துறை, அந்தந்த பேரூராட்சி நிர்வாகங்கள், போலீசார் இணைந்து, இதுபோன்ற இடங்களில் ஆய்வு செய்து, அவர்களுக்கு முறையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு, வியாபார நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஷெட்களுக்கு, வரி விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.