UPDATED : நவ 10, 2026 09:29 AM
ADDED : நவ 10, 2026 09:26 AM
சேலம்: சேலத்தில் வசிக்கும் வடமாநிலத்தவர்கள், லட்சுமி குபேர பூஜை செய்து, புதுக்கணக்கு துவங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.
தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் ஏப்.,1 அன்று தங்கள் கடை, தொழில் நிறுவனங்களில் சிறப்பு பூஜை செய்து, புதுக்கணக்கு துவங்குவது வழக்கம்.
இதே போல், வடமாநிலத்தவர்கள் தீபாவளி பண்டிகையில் லட்சுமி குபேர பூஜை செய்து, புதுக்கணக்கு துவக்குவதை கடைப்பிடித்து வருகின்றனர்.
சேலத்தில் வசிக்கும் வடமாநிலத்தவர்கள், தீபாவளியும் அமாவாசையும் இணைந்த நேற்று முன்தினம் துவங்கி, நேற்று மதியம் வரை தீபாவளி பண்டிகையையொட்டி, தங்கள் கடைகள், வியாபார நிறுவனங்களில் பழைய, உடைந்த மற்றும் தேவையில்லாத பொருட்களை அப்புறப்படுத்தி, சுத்தம் செய்து மாவிலை தோரணம், வாழை மரக்கன்று மற்றும் பூக்கள் பல வண்ண காகிதங்களால் அலங்கரித்தனர்.
பின்னர், சுவாமி படங்களை அலங்கரித்து, புது கணக்கு புத்தகத்தை வைத்து, லட்சுமி குபேர பூஜை நடத்தினர். பின் கணக்கு புத்தகத்தில், வரவு செலவு விபரம் எழுதி, வாடிக்கையாளர் மற்றும் ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கினர்.
சேலத்தில் குறிப்பாக அருணாசல ஆசாரி தெரு, கல்லாங்குத்து, தேவேந்திரபுரம், முதல் அக்ரஹாரம் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்களின் கடைகளில், நேற்று லட்சுமி குபேர பூஜையுடன் புதுக் கணக்கு துவங்கினர்.
