/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்கள் பிரச்னையை தீர்ப்பதில் இல்லையே! சுரங்க நடைபாதையில் திண்டாடும் மக்கள்
/
மக்கள் பிரச்னையை தீர்ப்பதில் இல்லையே! சுரங்க நடைபாதையில் திண்டாடும் மக்கள்
மக்கள் பிரச்னையை தீர்ப்பதில் இல்லையே! சுரங்க நடைபாதையில் திண்டாடும் மக்கள்
மக்கள் பிரச்னையை தீர்ப்பதில் இல்லையே! சுரங்க நடைபாதையில் திண்டாடும் மக்கள்
ADDED : செப் 18, 2024 08:44 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு சுரங்க நடைபாதையில் நிலவும் பிரச்னைகளுக்கு, நகராட்சி நிர்வாகம் தீர்வு காண வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொள்ளாச்சி சி.டி.சி., காலனி, மருதமலை ஆண்டவர் லே-அவுட், பெரியார் காலனி கிழக்கு, மேற்கு, ஓம் சக்தி நகர், நடராஜர் மணியகாரர் காலனி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இப்பகுதி மக்கள், பொள்ளாச்சி நகரத்துக்கு சென்று வரும் வகையில், ரயில்பாதையின் இருபுறமும் சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
இருந்தும் பயனில்லை!
சுரங்க பாதையில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் வகையில், சென்சார் கருவி பொருத்தப்பட்டது. தண்ணீர்சென்சாரில் பட்டதும், தண்ணீர் வெளியேறி பாலத்தில் உள்ள கால்வாயில் கலந்து விடும்.
பாலத்தில் கழிவுகள், மதுபாட்டில்கள் வீசப்படுவதால், சென்சார் பழுதடைந்தது. சீரமைக்காததால், இப்பகுதியில் ஊற்று நீர் பாலத்தில் தேங்கி விடுவதும்; ஊழியர்கள் வந்து, மோட்டார் வைத்து அதை வெளியேற்றுவதும் வழக்கமாக உள்ளது.
கம்பம் மட்டுமிருக்கு!
சுரங்க பாதையில், 10 மின்கம்பங்கள் இருந்தாலும், மின்விளக்குகள் இல்லை. இரவு நேரங்களில் இருள் சூழ்ந்த பாலத்தில் நகை பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடக்க அதிகளவு வாய்ப்புள்ளது.
இதனால், இவ்வழியாகபொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. இங்கு மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றவில்லை.
கோட்டூர் ரோடு மேம்பாலத்தில் உள்ள தெருவிளக்குகளும் எரிவதில்லை. இருள் சூழ்ந்த பாலத்தில், வாகனங்களின் முகப்பு வெளிச்சத்தை பயன்படுத்தியே ஓட்டுநர்கள் செல்கின்றனர். இது குறித்து நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் தெரிவித்தும் இது வரை நட வடிக்கை இல்லை.
உண்மை அறியணும்!
பொதுமக்கள் கூறியதாவது:
சுரங்க பாதை, கோட்டூர் மேம்பாலத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.பாலத்தில் விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டது. இவ்வழியில் உள்ள பிரச்னைகளால், மேம்பாலம் வழியாக செல்ல ரோட்டில் திரும்பினால் எதிரே வரும் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
தினமும் பலவிதமான பிரச்னைகளை சந்தித்தாலும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. கோட்டூர் ரோடு மேம்பாலத்தில், மின்விளக்குகளை சரி செய்யாத நிலையில், ஆளுங்கட்சியினர் சுவர் விளம்பரம் மட்டுமே பளீச்சென வரைந்துள்ளனர். விளம்பரம் செய்வதில் காட்டும் ஆர்வத்தில், இங்குள்ள பிரச்னைகளை தீர்க்க கொஞ்சமாவது காட்டியிருந்தால், மக்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைத்திருக்கும்.
காலையில், 7:00 மணிக்கு சுரங்கபாதையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது; இரவு, 7:00 மணிக்கு கோட்டூர் ரோடு மேம்பாலத்தில் தெருவிளக்கு எரிவதில்லை. இந்த நேரங்களில், அதிகாரிகள் ஆய்வு செய்தால் உண்மையான கள நிலவரம் தெரியும். அதன் பிறகாவது உரிய நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.
இவ்வாறு, கூறினர்.