/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதாள சாக்கடையில் கழிவுநீர் அடைப்பு அகற்ற ஹோட்டல்களுக்கு நோட்டீஸ்: மாநகராட்சி மத்திய மண்டல கூட்டத்தில் முடிவு
/
பாதாள சாக்கடையில் கழிவுநீர் அடைப்பு அகற்ற ஹோட்டல்களுக்கு நோட்டீஸ்: மாநகராட்சி மத்திய மண்டல கூட்டத்தில் முடிவு
பாதாள சாக்கடையில் கழிவுநீர் அடைப்பு அகற்ற ஹோட்டல்களுக்கு நோட்டீஸ்: மாநகராட்சி மத்திய மண்டல கூட்டத்தில் முடிவு
பாதாள சாக்கடையில் கழிவுநீர் அடைப்பு அகற்ற ஹோட்டல்களுக்கு நோட்டீஸ்: மாநகராட்சி மத்திய மண்டல கூட்டத்தில் முடிவு
ADDED : நவ 01, 2025 12:34 AM

கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல கூட்டம், மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. உதவி கமிஷனர் நித்யா முன்னிலை வகித்தார்.
அதில், கவுன்சிலர்கள் பேசியதாவது:
அலிமா பேகம், 84வது வார்டு: சூயஸ் நிறுவனம் குடிநீர் குழாய் பதித்து ஓராண்டுக்கு மேலாகி விட்டது. இன்னும் ரோட்டை சீரமைக்கவில்லை. பள்ளிகள், கோவில்கள், மசூதிகள் உள்ளன. மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தார் ரோடு போட வேண்டும்.
சுமா, 83வது வார்டு: ஹைவேஸ் காலனியில் நாய் தொல்லை அதிகமாக இருக்கிறது. பள்ளிகளுக்குள் சுற்றித்திரிகின்றன. மாணவியர் பயப்படுகின்றனர். நாய்களை விரைந்து பிடிக்க வேண்டும். அவற்றை பிடிக்கச் செல்லும் முன், கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
வித்யா, 67வது வார்டு: காந்திபுரம் பகுதியில் உள்ள ஹோட்டல்களில் இருந்து கழிவு, நேரடியாக சாக்கடை கால்வாயில் வெளியேற்றப்படுகிறது. சேம்பர் கட்டி பாதாள சாக்கடையில் இணைப்பு கொடுக்க வேண்டும். அடைப்பு ஏற்படுவதால் வீடுகளுக்குள் கழிவு நீர் வருகிறது. ஹோட்டல் நிர்வாகங்களுக்கு நோட்டீஸ் வழங்கி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரபா, 48வது வார்டு: மழை நீர் வடிகால் துார் வார வேண்டும். 16 இடங்களில் துார்வார வேண்டுமென 'லிஸ்ட்' கொடுத்துள்ளேன். சங்கனுார் பள்ளத்தை துார்வார வேண்டும். ஆக்கிரமிப்புகள் அதிகமாக காணப்படுகின்றன; பாரபட்சம் காட்டாமல் அகற்ற வேண்டும். பாலாஜி நகரில் அனுமதியின்றி கட்டிய வணிக வளாகம், சீல் வைக்கப்பட்டுள்ளது. அவ்வளாகத்துக்கு ரேஷன் கடையை மாற்ற வேண்டும்.
ராஜேஸ்வரி, 65வது வார்டு: எனது வார்டில் 100 தெருவிளக்குகள் எரிவதில்லை. டெண்டர் விட்டு ஆறு மாதங்களாகியும், ரோடு போடும் பணி இன்னும் நடக்கவில்லை.
ஷர்மிளா, 70வது வார்டு: மாநகராட்சி பூங்காக்களுக்கு காவலாளி நியமிக்க வேண்டும். அவர்களை அடையாளம் காண, சீருடை வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் பேசினர்.
கூட்டத்தில், நிர்வாக பொறியாளர் கருப்பசாமி, உதவி நகரமைப்பு அலுவலர் ஹேமலதா, உதவி நிர்வாக பொறியாளர் (பொ) குமரேசன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
'டெண்டர் எடுத்த
பணிகளை 10 நாட்களில் முடிக்கணும்'
மண்டல தலைவர் மீனா பேசுகையில், ''கழிவு நீரை சாக்கடை கால்வாயில் நேரடியாக கலக்கும் ஹோட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். டெண்டர் எடுத்த வேலைகளை, ஒப்பந்ததாரர்கள் 10 நாட்களில் துவக்கி, 3 மாதத்துக்குள் முடிக்க வேண்டும். கவுன்சிலர்களுக்கு தெரியாமல் எந்த வேலையும் செய்யக்கூடாது. கன்டிஜென்சி பில் போட்டு வேலைகள் செய்து, நிதி எடுக்கப்படுகிறது. அவ்வேலைகள் என்னென்ன, எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்கிற விவரம், மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் பார்வைக்கு வைக்கப் படுவதில்லை,'' என் றார்.

