ADDED : ஜூலை 10, 2025 10:20 PM

கோவை; தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் நேற்று நடந்தது. மாநில மைய துணைத்தலைவர் சுமதி தலைமை வகித்தார்.
தடுப்பூசி பணியில் எம்.எல்.ஹெச்.பி., செவிலியர்களை உட்படுத்தும் உத்தரவை ரத்து செய்யவேண்டும். வி.ஐ.என் மற்றும் ஏ.என்.எம்., காலியிடங்களில் அப்பயிற்சி பெற்று காத்திருப்பவர்களை மட்டுமே நியமிக்கவேண்டும்.
முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தை சமூக நலத்துறைக்கு மாற்றவேண்டும். மஞ்சள் காமலை மருந்துக்கான தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கோரிக்கை குறித்து அரசு பரிசீலிக்காவிடில், மூன்றாம் கட்ட நடவடிக்கையாக மாநில அளவில் காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை உண்ணாவிரத போராட்டம் சென்னையில், வரும் 24ம் தேதி நடைபெறும் என கோவை மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கலெக்டர் அலுவலக வளாகம் முன் நடந்த, ஆர்ப்பாட்டத்தில், சங்க மாவட்ட தலைவர் ரேவதி, மாவட்ட செயல்குழு நிர்வாகி பபிதாஸ்ரீ உள்ளிட்ட 40 பேர் பங்கேற்றனர்.