/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துணைமேயர் வார்டில் ஆக்கிரமிப்பாளர்கள் குஷி!
/
துணைமேயர் வார்டில் ஆக்கிரமிப்பாளர்கள் குஷி!
ADDED : செப் 18, 2024 10:49 PM
போத்தனூர்: பி.கே.புதூர், பத்ரகாளியம்மன் கோவில் வீதி சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, குடியிருப்போர் எதிர்பார்க்கின்றனர்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட, 92வது வார்டு பி.கே.புதூரில் பத்ரகாளியம்மன் கோவில் வீதி உள்ளது. பாலக்காடு சாலை சந்திப்பிலிருந்து இவ்வீதிக்கு செல்லும் சாலை, 17 அடி அகலமுடையது.
இதன் இருபுறமும் ஆக்கிரமிப்பு உள்ளதால், வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகையில், 'இச்சாலையில் மூன்று முதல் ஐந்து அடி வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் போன்ற அவசர உதவிக்கான வாகனங்கள் வர முடிவதில்லை.
ஏழு ஆண்டுகளாக முதல்வர் தனிப்பிரிவு உட்பட அனைத்து துறைகளுக்கும், மனு கொடுத்துவிட்டோம். பெயரளவு ஆக்கிரமிப்பை அகற்றினர்.
உதவி நகரமைப்பு அலுவலரிடம் கேட்டபோது, 'கட்டட உரிமையாளர்களே அகற்றுவதாக உறுதி கூறியுள்ளதாக' தெரிவித்தார். இதுவரை அகற்றவில்லை. அதற்குள் மழைநீர் வடிகாலை கட்டிவிட்டனர். ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
கண்டுகொள்ளப்படாத இந்த வார்டின் கவுன்சிலர் யார் தெரியுமா... துணை மேயர் வெற்றிசெல்வன்!