/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோந்து பணிக்கு துப்பாக்கியுடன் செல்ல அதிகாரிகள் அறிவுரை
/
ரோந்து பணிக்கு துப்பாக்கியுடன் செல்ல அதிகாரிகள் அறிவுரை
ரோந்து பணிக்கு துப்பாக்கியுடன் செல்ல அதிகாரிகள் அறிவுரை
ரோந்து பணிக்கு துப்பாக்கியுடன் செல்ல அதிகாரிகள் அறிவுரை
ADDED : ஆக 13, 2025 08:59 PM
பெ.நா.பாளையம்; இரவு நேர ரோந்து பணியின் போது தற்காப்புக்காக, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தலாம் என, பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி.,பொன்னுசாமி கூறினார்.
சமீபத்தில் திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.ஐ., ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின், மாநிலம் முழுவதும் போலீஸ் துறை சார்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தான அறிவிப்புகள், தமிழகத்தில் உள்ள 1,321 சட்டம்-ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
பழைய குற்றவாளிகளை தேடி செல்லும் போது போலீசார் தனியாக செல்லாமல், கூடுதல் போலீசாருடன் செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., பொன்னுசாமி கூறுகையில், பெரியநாயக்கன்பாளையம் சப் டிவிஷனுக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம், தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் பகல், இரவு நேர ரோந்து பணி தீவிர படுத்தப்பட்டு உள்ளது.
பள்ளி, கல்லூரிகள், வங்கிகள், பூட்டி கிடக்கும் வீடுகள், முக்கிய பிரமுகர் வசிக்கும் பகுதிகள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் பகுதிகளை போட்டோ எடுத்து உரிய அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்.
இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ரோந்து பணிக்கு செல்லும் போலீசார், முக்கிய சந்திப்புகளில் நின்று, கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். பிரச்னைகள் மற்றும் தகராறுகள் நடந்து கொண்டிருக்கும் இடங்களுக்கு போலீசார் தனியாக செல்லக்கூடாது. ரோந்து பணிக்கு செல்லும் போலீசார் கட்டாயம் துப்பாக்கி வைத்திருக்க வேண்டும்.
அசம்பாவித சூழ்நிலை ஏற்பட்டால், தற்காப்புக்காக சுடலாம். துப்பாக்கியை பயன்படுத்துவது குறித்தான பயிற்சி, குறிப்பிட்ட கால இடைவெளியில் அனைத்து போலீசாருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தாங்கள் குடியிருக்கும் பகுதிகளில் குடியிருப்பு நல சங்கங்களின் உதவியோடு, 'சிசிடிவி' கேமரா பொருத்துவது நல்லது. இதனால் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கலாம்.
மீறி நடக்கும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து, சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டனை பெற்றுத் தரலாம் என்றார்.