/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராம சபையில் அதிகாரிகள் பங்கேற்பதில்லை; மக்கள் ஆவேசம் முத்தரப்பு கூட்டம் நடத்தி தீர்வு காண உறுதி
/
கிராம சபையில் அதிகாரிகள் பங்கேற்பதில்லை; மக்கள் ஆவேசம் முத்தரப்பு கூட்டம் நடத்தி தீர்வு காண உறுதி
கிராம சபையில் அதிகாரிகள் பங்கேற்பதில்லை; மக்கள் ஆவேசம் முத்தரப்பு கூட்டம் நடத்தி தீர்வு காண உறுதி
கிராம சபையில் அதிகாரிகள் பங்கேற்பதில்லை; மக்கள் ஆவேசம் முத்தரப்பு கூட்டம் நடத்தி தீர்வு காண உறுதி
ADDED : ஜன 26, 2024 11:39 PM

குடிமங்கலம்: குடிநீர் வடிகால் வாரியம், மின்வாரியம் உள்ளிட்ட துறையினர் கிராம சபையில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கிராம சபையில் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 23 ஊராட்சிகளிலும், குடியரசு தினத்தையொட்டி நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், அரசு அறிவித்த விவாத பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
விருகல்பட்டி ஊராட்சியில், ஊராட்சித்தலைவர் அகல்யா தலைமை வகித்தார். கூட்டத்தில், ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களுக்கு போதியளவு குடிநீர் கிடைப்பதில்லை. இது குறித்து விளக்கம் கேட்க, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் யாரும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதில்லை. இதனால், குடிநீர் வினியோக பிரச்னைகளுக்கு தீர்வு கிடைப்பதில்லை.
ஒன்றிய அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை. தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், குறித்த நேரத்தில் சம்பளம் வழங்க வேண்டும்.விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக வேலை வழங்குவது அவசியம். மின்தடை ஏற்படுவது குறித்து ராமசந்திராபுரம் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதில்லை.
கிராம சபை கூட்டத்திலும், மின்வாரியத்தினர் பங்கேற்பதில்லை என விவாதம் நடந்தது. அதிகாரிகள் பங்கேற்கும் வரை, காத்திருப்போம் என மக்கள் தெரிவித்தனர்.
அனிக்கடவு ஊராட்சியில் ஊராட்சி தலைவர் அழகம்மாள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் போதியளவு குடிநீர் வினியோகிக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார வளாகத்தில், நிலவும் சுகாதார சீர்கேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் பேசினர்.
இது குறித்து ஒன்றிய அதிகாரிகள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசினர். விரைவில், கிராமங்களில், ஊராட்சி நிர்வாகம் மற்றும் மக்கள் பங்கேற்கும் முத்தரப்பு கூட்டம் நடத்தி, பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர்.
இதையடுத்து, மக்கள் முன்னிலையில், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

