/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திறந்தவெளியில் விடப்பட்ட கழிவுநீர்; செப்டிக்டேங்க் லாரிக்கு அபராதம்
/
திறந்தவெளியில் விடப்பட்ட கழிவுநீர்; செப்டிக்டேங்க் லாரிக்கு அபராதம்
திறந்தவெளியில் விடப்பட்ட கழிவுநீர்; செப்டிக்டேங்க் லாரிக்கு அபராதம்
திறந்தவெளியில் விடப்பட்ட கழிவுநீர்; செப்டிக்டேங்க் லாரிக்கு அபராதம்
ADDED : செப் 26, 2024 11:25 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மாட்டு சந்தையில், 'செப்டிக் டேங்க்' லாரியில் இருந்து, திறந்த வெளியில் கழிவுநீர் விடப்பட்டதை, வியாபாரிகள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அதிகாரிகள் அந்த வாகனத்துக்கு அபராதம் விதித்தனர்.
பொள்ளாச்சி மாட்டு சந்தை, செவ்வாய், வியாழக்கிழமைகளில் கூடுகிறது. சந்தையில் உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை செப்டிக்டேங்க் சுத்தம் செய்த லாரி ஒன்று, மாட்டு சந்தையின் முன்பகுதியில் நிறுத்தி, சாக்கடை கால்வாயில் கழிவுகளை திறந்து விட்டது. கடும் துர்நாற்றம் வீசியதை கண்ட வியாபாரிகள், லாரியை சிறைபிடித்து கழிவுகள் கொட்டுவதை கண்டித்து, லாரி டிரைவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டனர்.
வியாபாரிகள் கூறியதாவது: பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும், மாடுகளுடன் வியாபாரிகள் வருகின்றனர். வியாபாரிகள் இரவு நேரம் இங்கே தங்கிச் செல்வதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், செப்டிக் டேங்க் கழிவுகளை கொண்டு வந்து திறந்தவெளியில் விடுவதால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. இதுபோன்ற செயல்கள் அடிக்கடி நடக்கின்றன.
இது குறித்து விசாரித்தால், அதிகாரிகள் கொட்ட சொன்னதால் தான் கொட்டுகிறோம் என செப்டிக் டேங்க் லாரி டிரைவர்கள் தெரிவிக்கின்றனர். இது போன்ற செயல்களால், மாட்டு சந்தை சுகாதாரம் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இது குறித்து, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.
நகராட்சி கமிஷனர் கணேசன் கூறியதாவது:
செப்டிக் டேங்க் லாரிகளில் இருந்து கழிவுகளை கொண்டு வந்தால், அவை சுத்திகரிப்பு நிலையத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. திறந்தவெளியில் கழிவுகளை கொட்டக்கூடாது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாட்டு சந்தையில் கழிவு கொட்டிய வாகனத்துக்கு, முதல் முறை என்பதால், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இரண்டாவது முறை என்றால், 50 ஆயிரம் ரூபாயும், அதற்கு பின், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, செப்டிக் டேங்க் லாரி உரிமையாளர்கள் முறையாக கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினார்.