/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில் அருகே கல்லறை தோட்டம் அமைக்க எதிர்ப்பு
/
கோவில் அருகே கல்லறை தோட்டம் அமைக்க எதிர்ப்பு
ADDED : நவ 06, 2025 11:34 PM

மேட்டுப்பாளையம்: கோவில் அருகே கல்லறைத் தோட்டம் அமைக்க, எதிர்ப்பு தெரிவித்து கொடுத்த கோரிக்கை மனு மீது, நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கோவை வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், 13ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்த, ஹிந்து முன்னணி முடிவு செய்துள்ளது.
மேட்டுப்பாளையம் தாலுகா, சிறுமுகை அடுத்த இரும்பறை ஊராட்சிக்கு உட்பட்ட சிட்டேபாளையம் பெரிய தோட்டம் புதூர் பகுதியில், நூற்றுக்கு மேற்பட்ட, ஹிந்து குடும்பத்தினர் வசிக்கின்றனர். குடியிருப்பு பகுதி அருகே கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இப்பகுதியில் உள்ள காலி இடத்தில் கிறிஸ்தவ கல்லறை தோட்டம் அமைக்க, இடம் ஒதுக்க வேண்டும் என, கிறிஸ்துவ அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
குடியிருப்புகள் மற்றும் கோவில் இருப்பதால், இப்பகுதி அருகே கல்லறை தோட்டம் அமைக்க இடம் ஒதுக்கக் கூடாது. மேலும் காலி இடத்தில் பொது மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி, வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என, ஹிந்து முன்னணியினர் மேட்டுப்பாளையம் தாசில்தாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கோவை வடக்கு ஆர்.டி.ஓ.,விடமும் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் தாசில்தார், அந்த இடத்தை ஆய்வு செய்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிந்து முன்னணி கோவை கோட்டச் செயலாளர் ராஜ்குமார் தலைமையில், தாசில்தாரர் கவிதாவிடம் முறையிட்டனர்.
அப்போது ஹிந்து முன்னணியினர் 'தாங்கள் கொடுத்த மனு மீது, எவ்வித நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தி வருகிறீர்கள். வருகிற 12ம் தேதிக்குள் கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், 13ம் தேதி கோவை வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் செய்வோம் என தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் தலைமையிட துணை தாசில்தார் சங்கர்லால், மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் சின்னகாமணன், சிறுமுகை சப்- இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் வருவாய் துறையினர் பங்கேற்றனர்.

