/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சின்னவேடம்பட்டி குளத்தில் மாநகராட்சி சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு
/
சின்னவேடம்பட்டி குளத்தில் மாநகராட்சி சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு
சின்னவேடம்பட்டி குளத்தில் மாநகராட்சி சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு
சின்னவேடம்பட்டி குளத்தில் மாநகராட்சி சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு
ADDED : ஆக 17, 2025 11:01 PM

கோவை; சின்ன வேடம்பட்டி குளத்தில், மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நீரை வெளியேற்ற, எதிர்ப்பு தெரிவிக்கும் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும், கோவை மாநகராட்சியும் இணைந்து சின்னவேடம்பட்டி குளத்தில், நாள் ஒன்றுக்கு ஒரு கோடி லிட்டர் கழிவுநீரை சுத்திகரித்து வரும் திட்டத்தை துவக்க உள்ளது.
இது குறித்த பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், நேற்று சின்ன வேடப்பட்டியில் நடந்தது.
சின்னவேடம்பட்டி குடியிருப்போர் நல அமைப்பின் உறுப்பினர் குமாரசாமி பேசுகையில், சின்னவேடம்பட்டி குளம், 1981ல் அமைக்கப்பட்டது. சங்கனூர் பள்ளத்தில் வரும் உபரி நீரை தேக்கி வைக்க ஏற்படுத்தப்பட்டது. இந்த நன்னீர் ஏரி, நான்கு நிலைகளில் வடிகட்டப்பட வேண்டும். வடிகட்டும் போது ஏற்படும் கழிவுகளால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். நிலத்தடிநீர், இப்பகுதி மக்கள் சுகாதாரம் பாதிக்கப்படும்.
ஒண்டிப்புதூர், சொக்கம்புதூர், நஞ்சுண்டாபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முழுமையாக செயல்படவில்லை. விவசாயம் காக்க, நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்,'' என்றார்.
விவசாயிகள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் காளிச்சாமி பேசுகையில், சின்னவேடம்பட்டி ஏரியை பாதுகாக்க, பல ஆண்டுகளாக வாரந்தோறும் களப்பணியை ஏரி பாதுகாப்பு அமைப்பு மேற்கொண்டு வருகிறது.
3000க்கும் மேற்பட்ட பயன்தரும் மரங்களை, நட்டு பராமரித்து வருகிறது. உயிர்வேலியை அமைத்து பாதுகாப்பை ஏற்படுத்தியது. உயிரின மண்டலமாக மாற்றி உள்ளது.
இங்கு, மாநகராட்சி சுத்திகரிப்பு நீரை வெளியேற்றினால், குளம் ஓரிரு மாதங்களில் நிரம்பி விடும்.
குளத்தை பாதுகாக்கா விட்டால், மாநகராட்சி ஆக்கிரமித்து விடும். இதுவரை எதிர்ப்பு தெரிவித்தும் இந்த முயற்சி கைவிடப்படவில்லை,'' என்றார்.
வேளாண்மை உற்பத்தி குழு உறுப்பினர் செந்தில் குமார் பேசுகையில், கோவையின் நலன் கருதி இந்த திட்டத்தை கைவிட வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, உயர் அதிகாரிகளுக்கு எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். எம்.எல்.ஏ., க்கள், எம்.பி., க்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும், என்றார்.
ரமணி மயூரி குடியிருப்போர் நல சங்க தலைவர் முன்னாள் காவல் துறை அதிகாரி தெய்வசிகாமணி கொ.ம.க., செயலாளர் ரமேஷ், தேவராஜ், மாரிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.