/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக்க எதிர்ப்பு
/
திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக்க எதிர்ப்பு
ADDED : அக் 30, 2025 11:21 PM

அன்னுார்:  குமாரபாளையத்தில் குப்பை கிடங்கு அமைக்க பேரூராட்சி மன்ற கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அன்னுார் பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் தலைமையில் நேற்று நடந்தது. துணைத் தலைவர் விஜயகுமார், செயல் அலுவலர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் செயல் அலுவலர் பேசுகையில், ''தினமும் 10 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. குளத்தில் குப்பை கொட்டுவதற்கு பொதுப்பணித்துறை எதிர்ப்பு தெரிவிக்கிறது. எனவே குமாரபாளையத்தில் உள்ள இரண்டரை ஏக்கர் மயானத்தில் ஒரு ஏக்கரில் திடக்கழிவு மேலாண்மை பணி செய்யலாம். மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தரம் பிரிக்கலாம், என்றார்.
கவுன்சிலர் அங்கத்தாள் பேசுகையில், குமாரபாளையத்தில் அந்த வார்டு குப்பையை மட்டுமே தரம் பிரிக்க வேண்டும். மற்ற வார்டுகளில் இருந்து வரும் குப்பையை அங்கு தரம் பிரிக்கக் கூடாது, என்றார்.
கவுன்சிலர் புவனேஸ்வரி பேசுகையில், 'அப்பகுதி மக்களின் கருத்து கேட்ட பிறகு முடிவு செய்யலாம். அதற்குள் முடிவு செய்யக்கூடாது, என்றார்.
கவுன்சிலர்கள் பேசுகையில், 'தென்னம்பாளை சாலை மிக குறுகலாக உள்ளது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இந்த சாலையில் திருமண மண்டபத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
அன்னுார் குளத்தில், 70 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது. குளத்திலிருந்து மழைநீர் செல்லும் வடிகால் அமைக்க நிலம் கையகப்படுத்த வேண்டும். அரசு நிலம் கையகப்படுத்தி தர வேண்டும். துப்புரவு அலுவலர் சரியான முறையில் பணியாற்றுவதில்லை. கவுன்சிலர்களை மரியாதை குறைவாக பேசுகின்றனர்' என்றனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள், பேரூராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

