ADDED : பிப் 01, 2024 05:40 AM
கோவை : கோவை, சுந்தராபுரத்தை சேர்ந்தவர் கென்னிங்ஸ். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவர், குடும்ப மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், மாதம் 497 ரூபாய் செலுத்தி வந்தார். அவரது மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவ சிகிச்சைக்கு 63,000 ரூபாய் செலவானது. சிகிச்சை பெற்றதற்கான தொகையை செலுத்திய பிறகு, மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பணம் வழங்க கோரி விண்ணப்பித்தார். ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம் பல்வேறு காரணங்களை கூறி பணம் வழங்க மறுத்தது.
இதனால் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், ''இன்சூரன்ஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்தது உறுதி செய்யப்பட்டதால், மனுதாரருக்கு மருத்துவ செலவு தொகை, 63,000 ரூபாய், மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், செலவு தொகை, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்,'' என்று உத்தவிட்டார்.