/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வழுக்கி விழுந்து இறந்தவருக்கு காப்பீடு தொகை வழங்க உத்தரவு
/
வழுக்கி விழுந்து இறந்தவருக்கு காப்பீடு தொகை வழங்க உத்தரவு
வழுக்கி விழுந்து இறந்தவருக்கு காப்பீடு தொகை வழங்க உத்தரவு
வழுக்கி விழுந்து இறந்தவருக்கு காப்பீடு தொகை வழங்க உத்தரவு
ADDED : ஆக 08, 2025 08:46 PM
கோவை; திருப்பூர் மாவட்டம், கே.ராயபாளையத்தை சேர்ந்தவர் சதாசிவம்; கோவை, திருச்சி ரோட்டிலுள்ள நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மருத்துவ காப்பீடு செய்திருந்தார். இதற்கான பிரிமீய தொகையை, 2022, டிச., 13 ல் செலுத்தினார். இந்நிலையில், சதாசிவம் வீட்டில் வழுக்கி விழுந்தார். படுகாயமடைந்த அவரை, கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தனியார் மருத்துவமனையில், மருத்துவ சிகிச்சை பெற்றதற்கான தொகை, 1.27 லட்சம் ரூபாய் வழங்க கோரி, அவரது மனைவி தங்கமணி விண்ணப்பித்தார். இன்சூரன்ஸ் நிறுவனம் விண்ணப்பத்தை நிராகரித்தது. இழப்பீடு வழங்க கோரி, கோவை கூடுதல் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தங்கமணி வழக்கு தாக்கல் செய்தார்.
இன்சூரன்ஸ் நிறுவனம் தாக்கல்செய்த பதில் மனுவில், 'புகார்தாரரின் கணவர் கீழே விழுந்ததில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறவில்லை. மது குடிக்கும் பழக்கமுள்ள அவருக்கு குடல் நோய் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, குடல் நோய் சிகிச்சைக்கு மருத்துவ காப்பீடு பொருந்தாது' என்று குறிப்பிட்டு இருந்தனர்.
விசாரித்த ஆணைய தலைவர் தட்சிணாமூர்த்தி, உறுப்பினர் சுகுணா பிறப்பித்த உத்தரவில், ' இன்சூரன்ஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரரின் கணவரின் மருத்துவ செலவு தொகை , 1.27 லட்சம் ரூபாய் திருப்பி செலுத்த வேண்டும், மன உளைச்சலுக்கு இழப்பீடாக 50,000 ரூபாய், வழக்கு செலவு, 10,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.