/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேம்பால இரும்பு சட்டங்கள் பராமரிப்பு பணி; போக்குவரத்து மாற்றம்
/
மேம்பால இரும்பு சட்டங்கள் பராமரிப்பு பணி; போக்குவரத்து மாற்றம்
மேம்பால இரும்பு சட்டங்கள் பராமரிப்பு பணி; போக்குவரத்து மாற்றம்
மேம்பால இரும்பு சட்டங்கள் பராமரிப்பு பணி; போக்குவரத்து மாற்றம்
ADDED : அக் 15, 2024 10:11 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு மேம்பாலத்தில் இரும்பு சட்டங்கள் பராமரிப்பு பணி மேற்கொள்வதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தை பொள்ளாச்சியுடன் இணைக்கும் - பாலக்காடு ரோட்டில், வடுகபாளையம் பிரிவு அருகே, பொள்ளாச்சி --- போத்தனுார் ரயில் பாதை குறுக்கிடுகிறது. இங்கிருந்த, ரயில்வே கேட்டை கடப்பதற்கு, நான்கு வழி மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த, 2019ல் துவங்கப்பட்டது.
மாநில நெடுஞ்சாலை துறை திட்டங்கள் பிரிவு வாயிலாக, 55.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணி மேற்கொள்ளப்பட்டது. கடந்த, 2022ம் ஆண்டு மேம்பாலம் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தில் இரும்பு சட்டங்கள் பெயர்ந்துள்ளன. வாகனங்கள் வேகமாக செல்லும் போது, அதிர்வு சப்தம் எழுப்புவதுடன், விபத்துகளை ஏற்படுத்தும் அபாயமும் இருந்தது.
இரும்பு சட்டங்களை உடனடியாக சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், சேதமடைந்த இரும்பு சட்டங்களை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள்) வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பாலத்தில் பெயர்ந்துள்ள இரும்பு சட்டங்கள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நான்கு இடங்களில் உள்ள இரும்பு சட்டங்களும் சீரமைக்கப்படுகிறது. இப்பணிகள், 30 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாலக்காட்டில் இருந்து வரும் வாகனங்கள் நல்லுார், ஜமீன் ஊத்துக்குளி வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.
முன்னறிவிப்பு இல்லை
விபத்துகளை தடுக்க பாலத்தில் இரும்பு சட்டங்கள் சீரமைப்பு பணி துவங்கி இருந்தாலும், போக்குவரத்து மாற்றம் குறித்து முன்கூட்டியே அறிவிக்கவில்லை. இதனால், தகவல் தெரியாமல் வாகன ஓட்டுநர்கள் பாலம் வரை சென்று திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
வருங்காலங்களில் இதுபோன்று பணிகள் மேற்கொள்ளும் போது, முன்கூட்டியே தகவல்களை தெரிவித்தால் பயனாக இருக்கும், என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.