/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரு துறைகளின் இழுபறியால் மேம்பால பணிகள் தொய்வு
/
இரு துறைகளின் இழுபறியால் மேம்பால பணிகள் தொய்வு
ADDED : ஜூன் 05, 2025 01:08 AM

மேட்டுப்பாளையம்; தோலம்பாளையம் மேம்பால பணிகள் ரயில்வே நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையின் இழுபறியால் தொய்வு ஏற்பட்டுள்ளது.
காரமடை நகரில் சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை குறைக்க, காரமடை -தோலம்பாளையம் ரயில்வே மேம்பாலம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக, 28.93 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே துவங்கி, ரயில்வே பாதையை கடந்து தோலம்பாளையம் சாலையில் சென்றடையும் வகையில், மேம்பாலம் கட்டும் பணியானது நடைபெற்று வருகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் பணிகள் முடிக்கவில்லை.
இதுகுறித்து காரமடை நகர மக்கள் கூறியதாவது: மேட்டுப்பாளையம்-காரமடை ரயில் பாதையின் குறுக்கே, மேம்பாலம் கட்டும் பணிகள் மிகவும் தொய்வாக நடைபெறுகின்றன. கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள், ரயில் பாதை உள்ள இடத்தில், ரயில்வே நிர்வாகம் இன்னும் மேம்பாலம் அமைக்கவில்லை. மேலும் தோலம்பாளையம், மேட்டுப்பாளையம் சாலைகளில், நெடுஞ்சாலை துறையினர், சாலை எவ்வாறு அமைப்பது குறித்து, அளந்து தரவில்லை. அதனால் நாங்கள் பணிகள் செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது என, கூறுகின்றனர். ஆனால் ரயில் பாதையின் இரு பக்கம்,இன்னும் முழுமையாக சாலைகள் மற்றும் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்படவில்லை. நெடுஞ்சாலை துறை மற்றும்,ரயில்வே நிர்வாகத்தின் இழுபறியால் பணிகள் தொய்வாக நடைபெறுகின்றன. தற்போது பள்ளி, கல்லூரிகள் திறந்ததால், காலை மாலை நேரங்களில், தனியார் பள்ளி வாகனங்கள், வருவதால், காரமடை நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள், காலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே தோலம்பாளையம் ரயில்வே மேம்பால கட்டுமான பணிகளை விரைந்து செய்து முடிக்க, கோவை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.