/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாயிபாபா காலனி அருகே மேம்பாலப் பணி; பாதாள சாக்கடை குழாய் மீண்டும் உடைப்பு
/
சாயிபாபா காலனி அருகே மேம்பாலப் பணி; பாதாள சாக்கடை குழாய் மீண்டும் உடைப்பு
சாயிபாபா காலனி அருகே மேம்பாலப் பணி; பாதாள சாக்கடை குழாய் மீண்டும் உடைப்பு
சாயிபாபா காலனி அருகே மேம்பாலப் பணி; பாதாள சாக்கடை குழாய் மீண்டும் உடைப்பு
ADDED : ஜூலை 12, 2025 01:01 AM

கோவை; கோவை, மேட்டுப்பாளையம் ரோட்டில், சாயிபாபா காலனி பகுதியில் மேம்பாலத்துக்கு துாண் அமைக்க துளையிட்ட போது, பாதாள சாக்கடை குழாய் உடைக்கப்பட்டுள்ளது. குளம் போல் கழிவு நீர் தேங்கியிருக்கிறது.
கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில், சாயிபாபா காலனியில் துவங்கி, பஸ் ஸ்டாண்ட் வரை, 1,140 மீட்டர் நீளத்துக்கு, தேசிய நெடுஞ்சாலைத்துறையால் மேம்பாலம் கட்டப்படுகிறது.
வாகன போக்குவரத்து மிகுந்த பகுதியாக இருப்பதால், ரோட்டில் துளையிட்டு துாண்கள் எழுப்பி, கர்டர்கள் துாக்கி வைத்து, உடனுக்குடன் ஓடுதளம் போடப்படுகிறது.
துாண்கள் எழுப்புவதற்கு துளையிடும்போது, பாதாள சாக்கடை குழாய்கள் உடைந்து விடுகின்றன. ரோட்டில் கழிவு நீர் வழிந்தோடுகிறது; சுகாதாரப் பிரச்னை ஏற்படுகிறது.
அதனால், பாதாள சாக்கடை குழாயை வேறிடத்துக்கு மாற்றுவதற்கு ஆலோசிக்கப்பட்டது.
மாநகராட்சி தரப்பில் மதிப்பீடு தயாரித்துக் கொடுக்க, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கோரினர்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தலைமையிலான குழுவினர் கள ஆய்வு செய்து, இரண்டு கோடி ரூபாய் செலவாகுமென அறிக்கை சமர்ப்பித்தனர்.
இப்பணியை, மேம்பாலப் பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரே, மாநகராட்சி அதிகாரிகளின் மேற்பார்வையில் செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
குழாயை இடம் மாற்றியமைக்கும் பணி இன்னும் செய்யவில்லை. இச்சூழலில், சாயிபாபா காலனி போலீஸ் ஸ்டேஷன் அருகே மீண்டும் குழாய் உடைக்கப்பட்டு, கழிவு நீர் குளம் போல் தேங்கியுள்ளது.
சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவுவதற்கு முன், கழிவு நீரை அப்புறப்படுத்தி, குழாயை மாற்றியமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.