/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொங்கல் இசைவிழாவில் பஞ்சரத்ன கீர்த்தனைகள்
/
பொங்கல் இசைவிழாவில் பஞ்சரத்ன கீர்த்தனைகள்
ADDED : ஜன 16, 2024 11:28 PM
கோவை:ஆர்.எஸ்.புரம், பாரதீய வித்யாபவன் சார்பில் நடந்த, பொங்கல் இசை விழாவின் நிறைவு நாளான நேற்று, தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளை, இசைக்கலைஞர்கள் மனமுருக பாடினர்.
பாரதீய வித்யாபவன் சார்பில், 27வது ஆண்டு, பொங்கல் இசை விழா கடந்த 12ம் தேதி துவங்கி, நேற்றுடன் நிறைவடைந்தது. இறுதிநாளான நேற்று காலை 10:00 மணிக்கு, கோவையை சேர்ந்த இசைக்கலைஞர்கள், அவர்களின் மாணவர்கள் என, 300 பேர் தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடினர். வயலின், மிருதங்கம், கடம் போன்ற இசைக்கருவிகளுடன் அரங்கேறிய இந்நிகழ்ச்சி, பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.
தொடர்ந்து, வளரும் கலைஞர்களுக்கான இசை நிகழ்ச்சியில், கன்னியாகுமரி பல்வேறு கீர்த்தனைகள் பாடினார். இறுதியாக, அபிஷேக் ரகுராம் குழுவினரின் இசைக்கச்சேரியுடன், விழா நிறைவு பெற்றது. இதில், அக்கரை சுபலட்சுமி, பிரசாந்த், திருச்சி கிருஷ்ணன் ஆகியோர் இசைக்கருவிகள் வாசித்தனர்.
பாரதீய வித்யாபவன் நிர்வாக குழு உறுப்பினர்கள் பாலசுந்தரம், சூரியநாராயணன், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

