/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஏ.பி., முன்னோடிகளுக்கு சிலைகள் அமைப்பு பயிற்சி அரங்கம் பணிகளும் தீவிரம்
/
பி.ஏ.பி., முன்னோடிகளுக்கு சிலைகள் அமைப்பு பயிற்சி அரங்கம் பணிகளும் தீவிரம்
பி.ஏ.பி., முன்னோடிகளுக்கு சிலைகள் அமைப்பு பயிற்சி அரங்கம் பணிகளும் தீவிரம்
பி.ஏ.பி., முன்னோடிகளுக்கு சிலைகள் அமைப்பு பயிற்சி அரங்கம் பணிகளும் தீவிரம்
ADDED : ஜன 17, 2025 11:40 PM

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில், பி.ஏ.பி., முன்னோடிகளுக்கான சிலைகள், விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும் கூட்ட அரங்கப் பணிகள் தீவிரமாக நடக்கிறது.
மேற்குத்தொடர்ச்சி மலைகளில் பெய்யும் மழை நீர், மேற்கு நோக்கி பாய்ந்து, வீணாக கடலில் கலப்பதை தடுத்து, அணைகளில் தேக்கி, கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு, பயன் அளிக்கும் திட்டமாக, பி.ஏ.பி., திட்டம் உள்ளது.
கேரள - தமிழக அரசு ஒப்பந்தம், மலைப்பகுதியில், ஒன்பது தொகுப்பு அணைகள் கட்டப்பட்டு, மலையை குடைந்து, மலைப்பகுதியிலேயே, 49 கி.மீ., துாரம் அமைந்துள்ள காண்டூர் கால்வாய் மற்றும், 147 கி.மீ., துாரம் நீரை கொண்டு சேர்க்கும் பிரதான, பகிர்மான கால்வாய்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் என ஆசியாவிலேயே, சிறந்த நீர்ப்பாசன திட்டமாக பி.ஏ.பி., திட்டம் உள்ளது.
பி.ஏ.பி., பாசன திட்டம் உருவாக காரணமாக இருந்தவர்களை சிறப்பிக்கும் வகையிலும், மற்றும் திட்டம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், கண்காட்சி, பயிற்சி மையம் ஆகியவை அமைக்கப்படும், என, தமிழக அரசு அறிவித்தது.
ஆழியாறு அணையில், திட்டப்பணி நடந்த போது ஏற்பட்ட விபத்தில் உயிர் நீத்தவர்களுக்கு, நினைவு மண்டபம் கட்ட திருத்திய திட்ட மதிப்பீடாக, ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணிகள் நடக்கின்றன.
தொடர்ந்து, பொள்ளாச்சி நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்திற்கு, முன்னாள் மத்திய அமைச்சர், 'சி.சுப்பிரமணியம் வளாகம்' என்று பெயர் சூட்டப்படுகிறது.
இவ்வளாகத்தில், விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில், இரண்டு அடுக்குகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்படுகிறது.
கட்டடத்தில், பயிற்சி அரங்கம், கண்காட்சி அரங்கம் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர், மறைந்த முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மகாலிங்கம் மற்றும் பழனிசாமி சிலைகளுடன் கூடிய நினைவு மண்டபமும் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
இப்பணிகள் பொள்ளாச்சி பி.ஏ.பி., தலைமைப்பொறியாளர் அலுவலகத்தில், தென்மேற்கு பகுதியில், 1.25 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் நடக்கிறது.
கீழ்த்தள அரங்கிற்கு, 'வி.கே. பழனிசாமி அரங்கம்' என பெயர் சூட்டப்படும்; மேல்தளத்தில் அமைக்கப்படும் அரங்கத்திற்கு 'பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அரங்கம்' என, பெயர் சூட்டப்படுகிறது.
மேலும், பி.ஏ.பி., திட்டப்பணிகள் குறித்து, பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் புகைப்படக் கண்காட்சியும் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இப்பணிகள் மொத்தம், நான்கு கோடியே, 28 லட்சத்து, 71 ஆயிரம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முகப்பு பகுதி, அணை போன்ற அமைப்பில் அமைக்கப்படுகிறது.
பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.