/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பரம்பிக்குளம் நீர்மட்டம் 67 அடியாக உயர்வு; 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
/
பரம்பிக்குளம் நீர்மட்டம் 67 அடியாக உயர்வு; 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
பரம்பிக்குளம் நீர்மட்டம் 67 அடியாக உயர்வு; 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
பரம்பிக்குளம் நீர்மட்டம் 67 அடியாக உயர்வு; 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
ADDED : ஜூலை 18, 2025 09:22 PM

பொள்ளாச்சி; பரம்பிக்குளம் அணை நீர்மட்டம், 67 அடியாக உயர்ந்ததையடுத்து, இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து, நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி டாப்சிலிப் அருகே, கேரள வனப்பகுதியில் பரம்பிக்குளம் அணை அமைந்துள்ளது. பி.ஏ.பி.- திட்டத்தின் உயிர்நாடியாக விளங்கும் பரம்பிக்குளம் அணை, 72 அடி உயரம் கொண்டது. மொத்தம், 17 டி.எம்.சி., நீர் இருப்பு வைக்கலாம்.
இந்த அணையில் சேகரிக்கும் நீர், துாணக்கடவு, பெருவாரிப்பள்ளம் வழியாக சர்க்கார்பதி கொண்டு சென்று மின் உற்பத்திக்கு பின், காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லப்படுகிறது. கடந்தாண்டு பருவமழை கை கொடுத்ததால் முழு கொள்ளளவை எட்டியது. நடப்பாண்டும் பருவமழை நன்றாக பெய்ததால் அணைக்கு நீர்வரத்து இருந்தது.
சோலையாறு அணையில் இருந்து உபரிநீர் பரம்பிக்குளம் அணைக்கு வந்ததால், நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது. கடந்த, 10ம் தேதி மொத்தம் உள்ள, 72 அடியில், 62.48 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. இதையடுத்து, நீர்வளத்துறை அதிகாரிகள், தமிழக - கேரளா மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
தொடர் நீர் வரத்து காரணமாக, பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் நேற்று காலை, 67.30 அடியாக உயர்ந்தது. வினாடிக்கு, 808 கனஅடி நீர்வரத்து இருந்தது. வினாடிக்கு, 40 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம், 67 அடியாக உயர்ந்ததும், இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து, அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'அணை நீர்மட்டம், 67 அடியை எட்டியதால், இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து, 70 அடியை தொடும் போது, இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும்,' என்றனர்.