/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயில் எழுதும்போது இதில் கவனமா இருங்க பெற்றோரே!
/
உயில் எழுதும்போது இதில் கவனமா இருங்க பெற்றோரே!
ADDED : ஏப் 26, 2025 11:10 PM
வாழ்நாள் முழுவதும் பிள்ளைகளுக்காகவே உழைத்து, களைத்து முதுமை வயதை எட்டும் பெற்றோரின் அதிகபட்ச எதிர்பார்ப்பு, பிள்ளைகளின் அன்பான வார்த்தைகளும், அரவணைப்பும் தான்.
ஆனால், அந்த வயதில் தான் பெரும்பாலான முதியோர், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாக, ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
என்னதான் பிள்ளைகள் மீது பாசம் இருந்தாலும், முதுமை வயதை எட்டியுள்ள பெற்றோர் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என, எச்சரிக்கின்றனர் வழக்கறிஞர்கள்.
இதுகுறித்து, வக்கீல் வெண்ணிலா கூறியதாவது:
சொத்து இருந்தாலும், இல்லை என்றாலும் முதுமை வயதை எட்டிய பெற்றோருக்கு இருப்பிடத்திற்கும், பராமரிப்புக்கும் ரூ.10 ஆயிரம் முதல் பிள்ளைகளின் பொருளாதார திறன் பொறுத்து, தொகையை பெற முடியும். பெற்றோரை பார்த்துக்கொள்ள வேண்டியது, பிள்ளைகளின் கடமை என்று சட்டம் சொல்கிறது.
சொத்துக்களை எழுதி கொடுத்துவிட்டு, பராமரிக்கவில்லை என்றால், அந்த சொத்தின் மீதான உரிமையை ரத்து செய்யவும், சட்டத்தில் இடம் உண்டு.
பாசம் என்பதையும் தாண்டி, சொத்துக்களை எழுதும் போதும், பணப்பலன்களை பங்கிடும் போதும் 25 சதவீதம் தனக்கென கட்டாயம் வைத்துக்கொள்ள வேண்டும்.
உயில் எழுதும் போது, தன்னை பராமரிக்க வேண்டியது பிள்ளைகளின் பொறுப்பு, மாதம் எவ்வளவு தொகை தரவேண்டும், பராமரிக்க தவறினால் உரிமை ரத்து செய்யும் அதிகாரம் உண்டு என்பதையும், அதில் குறிப்பிட்டு வைப்பது பாதுகாப்பானது.
பணம் கொடுக்கும் பொழுது முடிந்தவரை, பத்திரத்தில் அதனை பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள். பதிவு செய்யாவிட்டாலும், நோட்டரி கையெழுத்து மட்டும் பெற்று வைத்துக்கொள்ளலாம்.
என் மகன், மகள் மீது நம்பிக்கை உள்ளது என்ற பலர், இப்போது அவதிப்பட்டுக்கொண்டு உள்ளனர். மகன், மகள் நல்லவர்களாகவே இருந்தாலும், திருமணத்திற்கு பின் சூழல்கள் மாறும் என்பதால், பிள்ளைகளே இதற்கு முன்வருவது நல்லது.
இதுபோன்ற சிக்கல்களுக்கு முதியோர் சிவில் நீதிமன்றம், குடும்பநல நீதிமன்றங்களை தாராளமாக அணுகலாம். தாய், மனைவி குடும்ப வன்முறை பிரிவிலும் வழக்கு தொடர முடியும்.
மாவட்ட நிர்வாகத்தின் கீழ், டி.ஆர்.ஓ.,விடமும் புகார் அளிக்கலாம். இதுபோன்று பாதுகாப்பாக செயல்படுவது, முதுமை காலத்தில் மனதளவிலும், உடல் அளவிலும் நிறைவான வாழ்க்கையை வாழ உதவும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

