/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடை விடுமுறையில் வாராந்திர ரயில் இயக்கம் பயணியர் நலச்சங்கத்தினர் விழிப்புணர்வு
/
கோடை விடுமுறையில் வாராந்திர ரயில் இயக்கம் பயணியர் நலச்சங்கத்தினர் விழிப்புணர்வு
கோடை விடுமுறையில் வாராந்திர ரயில் இயக்கம் பயணியர் நலச்சங்கத்தினர் விழிப்புணர்வு
கோடை விடுமுறையில் வாராந்திர ரயில் இயக்கம் பயணியர் நலச்சங்கத்தினர் விழிப்புணர்வு
ADDED : ஏப் 11, 2025 10:17 PM
பொள்ளாச்சி, ; கோடை விடுமுறையை முன்னிட்டு, வாராந்திர ரயில்கள் இயக்கப்படுகிறது. இதனால், மகிழ்ச்சி அடைந்த ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
மேட்டுப்பாளையம் --- திருநெல்வேலி, திருநெல்வேலி -- மேட்டுப்பாளையம் இடையே, வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது. சிறப்பு ரயில், ஞாயிறு இரவு, 7:00 மணிக்கு திருநெல்வேலியில் (06030) இருந்து புறப்பட்டு மறுநாள் காலை, 7:30 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும்.
அதேபோல், திங்கள் இரவு, 7:45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில்(06029) இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7:45 மணிக்கு, திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயில், போத்தனுார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி வழியாக இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலுக்கு பயணியரிடம் வரவேற்பு இருந்தது.
இந்த ரயில் சேவையை கடந்த பிப்., மாதம் ரயில்வே நிர்வாகம் நிறுத்தியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இயக்கப்பட்ட வாராந்திர ரயில் நிறுத்தம் செய்யப்பட்டதால், பயணியர் அதிர்ச்சியடைந்தனர்.
பள்ளிகளில் தேர்வு முடிந்து, கோடை விடுமுறையில் இந்த ரயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இது குறித்து எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், சென்னையில் தெற்கு ரயில்வே பொது மேலாளரை சந்தித்து, மனு கொடுத்து வலியுறுத்தினார்.
இந்நிலையில், ரயில்வே நிர்வாகம், வாராந்திர சிறப்பு ரயிலான திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் ரயிலை இயக்கவும், போத்தனுார் - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவையை நீட்டித்தும் உத்தரவிட்டுள்ளது.
போத்தனுார் - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில், பொள்ளாச்சி, உடுமலை, பழநி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக செல்கிறது.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தாம்பரத்தில் இருந்து மாலை,5:05 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறு நாள் சனிக்கிழமை காலை, 5:30 மணிக்கு உடுமலை வருகிறது. மறு மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு, 11:55 மணிக்கு கிளம்பும் ரயில், பொள்ளாச்சி, உடுமலை, பழநி வழியாக தாம்பரத்துக்கு திங்கள் கிழமை மதியம், 12:15 மணிக்கு செல்கிறது. இதற்கான ரயில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கூறுகையில், 'திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் ரயில் மீண்டும் இயக்க உத்தரவிட்டதும், போத்தனுார் - தாம்பரம் ரயில் இயக்கப்பட உள்ளதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
கோடை விடுமுறையில், இந்த ரயில் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இது குறித்து பயணியரிடம் சமூக வலைதளங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது,' என்றனர்.