/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயன்படுத்த முடியாத நிலையில் நடைபாதை பாதசாரிகள் அவதி
/
பயன்படுத்த முடியாத நிலையில் நடைபாதை பாதசாரிகள் அவதி
பயன்படுத்த முடியாத நிலையில் நடைபாதை பாதசாரிகள் அவதி
பயன்படுத்த முடியாத நிலையில் நடைபாதை பாதசாரிகள் அவதி
ADDED : அக் 31, 2024 10:07 PM
உடுமலை; கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை நகரம் அமைந்துள்ளது. கனரக போக்குவரத்து அதிகரித்ததால், நெடுஞ்சாலையை விரிவுபடுத்தி, பாதாசாரிகளுக்காக, நடைபாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதையடுத்து, கடந்த, 2016ல், நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் நடைபாதை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி, உடுமலை, கொழுமம் ரோடு பிரிவிலிருந்து, 840 மீ., துாரத்துக்கும், பஸ் ஸ்டாண்டில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வரை, 58 லட்சம் ரூபாய் நிதியில், நடைபாதை அமைக்கப்பட்டது.
இதில், பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து அமைக்கப்பட்ட நடைபாதை தற்காலிக ஆக்கிரமிப்புகளால் காணாமல் போயுள்ளது.
கடைக்காரர்கள், பல்வேறு பொருட்களை நடைபாதையில் வைத்து கொள்வதால், பாதசாரிகள், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, அபாய நிலையில் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
இந்த நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், நகராட்சி நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லை.
மேலும், கொழுமம் ரோடு பிரிவிலிருந்து, 840 மீ., துாரத்துக்கு அமைக்கப்பட்ட நடைபாதை பயன்பாடு இல்லாமல், புதர் மண்டியுள்ளது.
அரசு அலுவலர் குடியிருப்பில் இருந்து குறிப்பிட்ட துாரத்துக்கு நடைபாதை இருந்ததற்கான சுவடே இல்லாமல் போயுள்ளது. நடைபாதையில், பதிக்கப்பட்ட கற்களும் சேதமடைய துவங்கியுள்ளது.
இதனால், நடைபாதையை பயன்படுத்தும் பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், பழநிக்கு நடைபயணம் செல்பவர்களும், நெடுஞ்சாலையிலேயே நடந்து செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
மேலும், 58 லட்ச ரூபாய் வரை செலவிட்டு கட்டப்பட்ட, நடைபாதை பரிதாப நிலைக்கு மாறியுள்ளது, அனைத்து தரப்பினரையும் வேதனையடைய செய்துள்ளது. நடைபாதையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.