/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தல் ஆணைய உத்தரவை அறியாத மக்கள்; வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் அதிருப்தி
/
தேர்தல் ஆணைய உத்தரவை அறியாத மக்கள்; வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் அதிருப்தி
தேர்தல் ஆணைய உத்தரவை அறியாத மக்கள்; வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் அதிருப்தி
தேர்தல் ஆணைய உத்தரவை அறியாத மக்கள்; வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் அதிருப்தி
ADDED : நவ 19, 2024 08:00 PM
பொள்ளாச்சி ; வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாமில், போதிய விண்ணப்பங்கள் கிடைக்காததால், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் அதிருப்தி நிலவுகிறது.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதில், தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
பொள்ளாச்சி தொகுதியில், ஆண்கள், 1,08,863; பெண்கள், 1,19,584; மூன்றாம் பாலினத்தவர்கள், 42 பேர், என மொத்தம், 2,28,489 வாக்காளர்கள் உள்ளனர். இதேபோல, வால்பாறை தனி தொகுதியில், ஆண்கள், 94,712; பெண்கள் 1,04,436; மூன்றாம் பாலினத்தவர்கள், 25 பேர் என மொத்தம், 1,99,173 வாக்காளர்கள் உள்ளனர்.
கிணத்துக்கடவு தொகுதியில், ஆண்கள், 1,67,728; பெண்கள், 1,75,578; மூன்றாம் பாலினத்தவர்கள், 45 பேர் என மொத்தம், 3,43,351 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த வாக்காளர் வரைவு பட்டியல், சப் -கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, வாக்காளர்கள், தங்கள் பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என, பார்வையிட்டு வருகின்றனர்.
அதேநேரம், 18 வயது பூர்த்தியானவர்கள் புதிதாக பெயர் சேர்க்கவும், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்யவும், பெயர்கள் நீக்கம் செய்யவும் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் நடத்தப்பட்டும் வருகிறது.
அதன்படி, கடந்த 16 மற்றும் 17ம் தேதிகளில், அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், நிர்ணயிக்கப்பட்ட ஓட்டுச்சாவடி மையங்களில் முகாம் நடத்தப்பட்டது. மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று, உரிய விண்ணப்பப் படிவங்கள் வாயிலாக, தங்கள் கோரிக்கை விபரங்களை தெரிவித்தனர்.
ஆனால், சில ஓட்டுச்சாவடி மையங்களில், போதிய விண்ணப்பங்கள் வழங்கப்படுவதில்லை எனக் கூறி, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால், இதற்கான பணியில் சற்று தொய்வும் ஏற்பட்டது.
இது குறித்து, வருவாய்த்துறையினர் கூறியதாவது:
ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் சத்துணவு அமைப்பாளராக உள்ளவர்களே ஓட்டுச்சாவடி நிலை அலுவலராக உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, அவர்களே, தங்களது மொபைல்போனை பயன்படுத்தி, 'my voter' ஆப் வாயிலாக வாக்காளர்களின் கோரிக்கையை ஏற்று, அதற்கான படிவம் எண்ணை குறிப்பிட்டு, உள்ளீடு செய்ய வேண்டும்.
ஆனால், ஒரே நேரத்தில், திரளும் மக்களின் தகவல்களை, உள்ளீடு செய்வதில் காலதாமதம் ஏற்படும் என்பதால், படிவம் வழங்கி பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்படுகிறது. அதன்பின், உரிய நேரம் ஒதுக்கி, அனைத்து விபரங்களும் உள்ளீடும் செய்யப்படும்.
இதனை அறியாத மக்கள், வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். படிவம் இல்லாதபோது, அதனை ஜெராக்ஸ் எடுத்து வரக் கூறினாலும் பிரச்னை எழுகிறது. விண்ணப்ப படிவங்கள் இல்லாதபோது, அங்கு பூத் ஏஜென்டுகளாக இருக்கும் அரசியல் கட்சியினரே தங்கள் பணத்தைக் கொடுத்து, ஜெராக்ஸ் நகல் எடுத்து வருகின்றனர்.
இனிவரும் நாட்களில், இத்தகைய பிரச்னை எழாமல் இருக்க, தேர்தல் அதிகாரிகள், இது குறித்த விபரத்தை ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் அறிவிப்பாக இடம்பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.