/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கனிமவள வாகனங்களால் பாதிப்பு; மக்கள் குமுறல்! நடவடிக்கை கோரி சப் - கலெக்டரிடம் மனு
/
கனிமவள வாகனங்களால் பாதிப்பு; மக்கள் குமுறல்! நடவடிக்கை கோரி சப் - கலெக்டரிடம் மனு
கனிமவள வாகனங்களால் பாதிப்பு; மக்கள் குமுறல்! நடவடிக்கை கோரி சப் - கலெக்டரிடம் மனு
கனிமவள வாகனங்களால் பாதிப்பு; மக்கள் குமுறல்! நடவடிக்கை கோரி சப் - கலெக்டரிடம் மனு
ADDED : மார் 24, 2025 11:15 PM

பொள்ளாச்சி; 'வேட்டைக்காரன்புதுார் வழியாக, அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனிமவள வாகனங்களால் பாதிப்பு ஏற்படுகிறது,' என, அப்பகுதி மக்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வலியுறுத்தினர்.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
* பா.ஜ., தெற்கு ஒன்றிய தலைவர் கவுதம் லிங்கராஜ் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், ராணுவ அதிகாரிகள், நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொது துறை நிறுவன பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோரின் குழந்தைகளுக்காக நடத்தப்பட்டு வருகிறது. எனினும் காலியிடங்கள் இருந்தால் பொதுத்தரப்பினருக்கும் இடம் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில், 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இதில், 1.43 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இதுபோன்று, பொள்ளாச்சி பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், கேந்திர வித்யாலயா பள்ளி துவக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
* பா.ஜ., விவசாயி அணி பொதுச் செயலாளர் செல்வபிரபு கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியது போன்று, தேங்காய் எண்ணெய்யை பொது வினியோக திட்டத்தில் ரேஷன் கடைகள் வாயிலாக வழங்க நடவடிக்கை எடுத்தால், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும்.
தேங்காய் எண்ணெய் நோய் எதிர்ப்பு திறன் அதிகம் உள்ளதாக, விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர். பொது சுகாதாரத்தையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதாக அமையும். எனவே, தேங்காய் எண்ணெய், ரேஷன் கடைகளில் வினியோகம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்துள்ளார்.
* வேட்டைக்காரன்புதுார் பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஆனைமலை அருகே வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சியில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறோம். இவ்வழியாக கேரளாவுக்கு, கனரக வாகனங்களில் கனிமவளம் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு செல்கின்றனர்.
இவ்வழியாக செல்லும் போது வீடுகள், கோவில்கள், திருமண மண்டபங்கள், பஸ் ஸ்டாப்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளன. அங்கன்வாடி, தொடக்க, நடுநிலை, மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. காலை, 7:00 மணி முதல், 10:00 மணி வரையிலும், மாலை, 4:00 மணி முதல் மாலை, 6:00மணி வரை கல்லுாரி வாகனங்கள் சென்று வருகின்றன.
இவ்வழியாக, கனிமவளம் ஏற்றிய வாகனங்கள் சென்று வருவதால், தார்சாலைகள் சேதமடைந்தும், இருபுறமும் கட்டப்பட்டுள்ள கால்வாய்கள் சேதமடைந்துள்ளன.
அதிர்வு காரணமாக, வீடுகளில் உள்ள நீர்த்தொட்டிகள், சுவர்களில் விரிசல் ஏற்படுகிறது. குடிநீர் குழாய்கள் சேதமடைந்துள்ளன. பள்ளி மற்றும் கல்லுாரி செல்வோருக்கு இடையூறு ஏற்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து கனிமவள லாரிகளை மாற்றுப்பாதையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, வலியுறுத்தப்பட்டுள்ளது.