/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான்கு நாட்கள் ஆகியும் மழைநீர் வடியவில்லை ;ஆர்.டி.ஓ.,விடம் மக்கள் சரமாரி புகார்
/
நான்கு நாட்கள் ஆகியும் மழைநீர் வடியவில்லை ;ஆர்.டி.ஓ.,விடம் மக்கள் சரமாரி புகார்
நான்கு நாட்கள் ஆகியும் மழைநீர் வடியவில்லை ;ஆர்.டி.ஓ.,விடம் மக்கள் சரமாரி புகார்
நான்கு நாட்கள் ஆகியும் மழைநீர் வடியவில்லை ;ஆர்.டி.ஓ.,விடம் மக்கள் சரமாரி புகார்
ADDED : அக் 22, 2025 11:49 PM

அன்னுார்: 'குடியிருப்புகளில் சூழ்ந்த மழை நீரை வெளியேற்ற வில்லை,' என கோவை வடக்கு ஆர்.டி.ஓ., விடம் மக்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
அன்னுார் வட்டாரத்தில் கடந்த 18ம் தேதி நள்ளிரவில் இரண்டு மணி நேரம் கனமழை பெய்தது.
இதில் அன்னுார்-சத்தி ரோட்டில் உள்ள பழனி கிருஷ்ணா அவென்யூ, புவனேஸ்வரி நகர் மற்றும் தாச பாளையம் செல்லும் சாலையில் உள்ள தோட்டங்களுக்குள் மழை நீர் புகுந்தது. பழனி கிருஷ்ணா அவென்யூவில் 40 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
நேற்று அதிகாலை ஒரு மணி நேரம் மழை பெய்தது. இந்த மழையால் புவனேஸ்வரி நகரில் 10 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. பழனி கிருஷ்ணா அவென்யூவில் தேங்கிய மழைநீர் அதிகரித்தது.
இதையடுத்து கோவை வடக்கு ஆர்.டி.ஓ., ராமகிருஷ்ணன், தாசில்தார் யமுனா, பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் ஆகியோர் பழனி கிருஷ்ணா அவென்யூவில் நேற்று ஆய்வு செய்தனர். ஆர்.டி.ஓ., விடம் பொதுமக்கள் கூறுகையில், 'கன மழை பெய்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது. குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்ற வெறும் ஒரு மோட்டாரை பயன்படுத்துகின்றனர்.
ஒரு ஏக்கர் பரப்பில் உள்ள தண்ணீரை கூட வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் இருக்கின்றனர். பாம்புகள், விஷப்பூச்சிகள் வீடுகளுக்குள் வந்து விட்டன. வீடுகளுக்குள் இரண்டடி தண்ணீர் நிற்கிறது. மழை நீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து வந்துள்ளது.
கடும் துர்நாற்றம் வீசுகிறது. குடிப்பதற்கு, குளிப்பதற்கு எதற்கும் தண்ணீர் இல்லை. வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. அதிகாரிகள் மெத்தனமாக இருக்கின்றனர். மூன்று ஆண்டுகளாக மழைநீர் செல்லும் பாதையை தயார் செய்கிறோம் என்று கூறி காலம் கடத்துகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து விடுகிறது. இவ்வாறு சரமாரியாக புகார் தெரிவித்தனர்.பொதுமக்களின் புகார்களுக்கு பதில் அளிக்க முடியாமல் ஆர்.டி.ஓ. அங்கிருந்து நகர்ந்தார்.
ஆர்.டி.ஓ. அதிகாரிகளிடம்,' உடனே கூடுதலாக இரண்டு மின்மோட்டார் நிறுவ வேண்டும். தண்ணீரை வெளியேற்றுவதற்கு மேலும் 200 மீ., தூரத்திற்கு சிறு வாய்க்கால் வெட்ட வேண்டும்,' என உத்தரவிட்டார்.