/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பைக்கிடங்கின் துர்நாற்றத்தை இனியும் தாங்க முடியாது! போராட்டம் நடத்த மக்கள் முடிவு

ADDED : மார் 31, 2025 10:32 PM

கோவை; தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க, வெள்ளலுார் குப்பை கிடங்கு எதிர்ப்பு குழு கூட்டமைப்பு சார்பில், வரும் 6ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
கோவை மாநகராட்சி பகுதியில் நாளொன்றுக்கு, 1,250 டன் குப்பை சேகரமாகிறது. தரம் பிரித்து சேகரித்தாலும், உரம் தயாரிக்க அனுப்பியது போக மீதமுள்ள குப்பை, வெள்ளலுார் கிடங்கில் கொட்டப்படுகிறது. அப்பகுதியில், நிலத்தடி நீர் மஞ்சளாகி விட்டது; காற்று மாசடைந்திருக்கிறது.
திறந்தவெளியில் குப்பை கொட்டக் கூடாதென, மாசு கட்டுப்பாடு வாரியம் பலமுறை அறிவுறுத்தியும் கூட, மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து அதே தவறை செய்து வருகிறது. சமீபகாலமாக, 5 கி.மீ., சுற்றளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
சில வாரங்களாக வெப்பம் அதிகமாக இருக்கிறது. ஆனாலும், காற்றுக்காக வீட்டு கதவு, ஜன்னல்களை கூட திறந்து வைக்க முடியாமல், மக்கள் அவதிப்படுகின்றனர்.
குப்பை கிடங்கை வேறிடத்துக்கு மாற்ற, கோரிக்கை விடுத்து வரும் நிலையில், மின்சாரம் தயாரிக்க பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து, குப்பையை தருவிக்க திட்டமிட்டு வருவதால், மக்கள் வேதனை அடைந்திருக்கின்றனர்.
இந்த பிரச்னையில், அரசின் கவனத்தை ஈர்க்க, ஒரு லட்சம் கையெழுத்து பெறும் இயக்கத்தை துவக்கியுள்ளனர்.
வரும், 6ம் தேதி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.