/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுங்கச்சாவடிக்கு எதிராக அணி திரண்ட மக்கள்
/
சுங்கச்சாவடிக்கு எதிராக அணி திரண்ட மக்கள்
ADDED : ஜன 08, 2024 02:41 AM

பொங்கலுார்;விதிமுறைகளை மீறி சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு, சுங்கம் வசூலிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக குற்றஞ்சாட்டி, திருப்பூர் அருகே நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்டம், பொங்கலுார் அடுத்த வேலம்பட்டி சுங்கச்சாவடியில் விரைவில் சுங்கம் வசூலிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
அவிநாசி - அவிநாசிபாளையம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் (எண்:381) உள்ள இந்த சுங்கச்சாவடியில், எந்த விதிமுறைகளையும் பூர்த்தி செய்யாமல் சுங்கம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வேலம்பட்டி சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சி தலைவர் நடராஜ் தலைமை தாங்கினார்.
சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கிட்டுசாமி பேசுகையில், ''மழைநீர் வடிகால் கால்வாய் கிடையாது. சர்வீஸ் ரோடு இல்லை. மாநகராட்சி எல்லையில் இருந்து பத்து கி.மீ., துாரத்துக்கு அப்பால் சுங்கச்சாவடி இருக்க வேண்டும் என்ற விதிமுறை மீறப்பட்டுள்ளது.
நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தவில்லை. சுங்கச்சாவடியை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டும் இதுவரை அகற்றவில்லை. சட்ட விதிகளுக்கு உட்பட்டு ரோடு போடவில்லை. சுங்கம் வசூலிப்பதை அனுமதிக்க முடியாது'' என்றார்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவன தலைவர் ஈசன் பேசுகையில், ''தற்காலிகமாக செயல்பட தலைமைச்செயலாளர் அனுமதி வழங்கியுள்ளார். இதனால் தொழில் துறை சுரண்டலுக்கு உள்ளாகும்'' என்றார்.
உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க மாநில பொதுச் செயலாளர் முத்து விஸ்வநாதன், எம்.எல்.ஏ., ஆனந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.