ADDED : செப் 24, 2026 07:12 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, மாமரத்துப்பட்டியில் குடிநீர் முறையாக வினியோகம் செய்ய வலியுறுத்தி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி அருகே, மாமரத்துப்பட்டி அம்பேத்கர் நகரில், குடிநீர் முறையாக வினியோகம் செய்யாததால், தேவனுார்புதுார் ரோட்டில் காலி குடத்துடன், பெண்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதனால், அவ்வழித்தட போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசுப்ரமணியம், கோமங்கலம் போலீஸ் எஸ்.ஐ., இளங்கோ ஆகியோர் பேச்சு நடத்தினர்.
அப்போது மக்கள் கூறுகையில், ‘கடந்த ஒரு வாரமாக குடிநீர் முறையாக வினியோகம் இல்லை. இதற்காக காலி குடங்களுடன் அலைய வேண்டியதுள்ளது. குடிநீர் வழங்க வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களது கோரிக்கை நிறைவேற்ற வேண்டும்,’ என்றனர்.
இதையடுத்து, குடிநீர் பிரச்னைக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால், மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
