/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்ணீர் இன்றி பரிதவிக்கும் மக்கள்
/
தண்ணீர் இன்றி பரிதவிக்கும் மக்கள்
ADDED : ஜன 30, 2024 12:11 AM

கோவை;கீரணத்தத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில், பிற பயன்பாட்டுக்கான தண்ணீர் மோட்டார் பழுதடைந்து 15 நாட்கள் ஆகிவிட்டது. இனியும் சரிசெய்யாததால், மக்கள் கடும் அவஸ்தைக்குள்ளாகின்றனர்.
கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அளித்த மனுவில், 'சீராபாளையம் கிராமத்தில் விவசாய பூமிக்கு அருகில் தனியார் நிறுவனம், மனை பிரிவு அங்கீகாரம் பெற்று வீடுகள் கட்டி விற்பனை செய்து வருகிறது.
இந்த லே அவுட்டிலிருந்து வெளியேற்றும் கழிவுநீர், குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் அருகே உள்ள விவசாய நிலத்தில் சேர்ந்து, நிலங்களை சேதப்படுத்துகிறது.
இது குறித்து, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தும் ஊராட்சி நிர்வாகம் சரிசெய்யவில்லை. அரசு விதிமுறைகளை பின்பற்றாமல், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் வகையில் அமைக்கப்பட்ட மனைப்பிரிவு அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். ஊராட்சி செயலர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தினர்.
ஒண்டிப்புதூர் ராமச்சந்திரா நாயுடு சாலையில் உள்ள, 3வது ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகளை துவங்க கோரி, பல கட்ட போராட்டம் நடத்தியும் பணிகள் நடைபெறவில்லை.
அதற்கான அரசாணை ரத்து செய்யப்பட்டதால், வரும் 7-ம் தேதி அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, சிவலிங்கபுரம், ஸ்ரீ காமாட்சி நகர், சக்தி நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.
தண்ணீர் வரவில்லை
கீரணத்தம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மற்றும் பொதுமக்கள் அளித்த மனுவில், 'இக்குடியிருப்பில், 640 வீடுகள் உள்ளன. தற்போது 120 குடியிருப்புகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். இங்கு உப்பு தண்ணீர் மோட்டார் பழுதடைந்து 15 நாட்கள் ஆகிவிட்டது. தண்ணீர் பைப் சேதமடைந்துள்ளது. கட்டடத்தை சரிவர பராமரிப்பு செய்வதில்லை' என்று கூறியிருந்தனர்.