அதிகாரிகளுக்காக காத்திருந்த மாற்றுத்திறனாளிகள் குமுறல்
அதிகாரிகளுக்காக காத்திருந்த மாற்றுத்திறனாளிகள் குமுறல்
ADDED : செப் 23, 2026 09:13 PM

கோவை: நடப்பு ஆண்டுக்கான பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேற்று நடந்தது. அழைப்பாணை கொடுக்கப்பட்ட 120 பேரில், 100- பேர் பங்கேற்றனர்.
காலை 10.30 மணிக்கு நேர்முக தேர்வு நடக்கும் என கூறப்பட்டிருந்ததால், காலை 9 மணிக்கே பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மாற்றுத்திறனாளிகள காத்திருந்தனர்.
ஆனால், நேர்முகத் தேர்வுக்கு வட்டார போக்குவரத்து துறையை சேர்ந்த பிரேக் இன்ஸ்பெக்டர் வருவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால், குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு துவங்கவில்லை. பகல் 12.30 மணிக்கு மேல் நேர்முகத் தேர்வு துவங்கியது. இதனால், பல மணி நேரம் காத்திருந்த மாற்றுத்திறனாளிகள் அதிருப்தி அடைந்தனர்.
மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், ‘பஸ்சில் பயணிப்பதில் சிரமம் உள்ளதால், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களில் அதிக செலவு செய்து வந்தோம். ஆனால், உரிய நேரத்தில் நேர்முகத் தேர்வு துவங்கவில்லை. சாப்பிடக்கூட வெளியே செல்ல முடியாமல், பல மணி நேரம் இங்கேயே காத்திருக்கிறோம். அதிகாரிகளின் ஒப்புதலுக்கு பிறகே முகாம் தேதி இறுதி செய்யப்படும். அப்படி இருக்கையில், அதிகாரிகள் காலதாமதமாக வந்தால் எப்படி?’ என்றனர்.
அதிகாரிகளிடம் கேட்டபோது, வட்டார போக்குவரத்துத் துறை அலுவலர்கள் வேறு பணியில் இருந்ததால், நேர்முகத் தேர்வுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
