/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நல்லி செட்டிபாளையம் குளத்தில் மக்கள் காத்திருப்பு போராட்டம்
/
நல்லி செட்டிபாளையம் குளத்தில் மக்கள் காத்திருப்பு போராட்டம்
நல்லி செட்டிபாளையம் குளத்தில் மக்கள் காத்திருப்பு போராட்டம்
நல்லி செட்டிபாளையம் குளத்தில் மக்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : நவ 11, 2025 10:47 PM

அன்னுார்: அத்திக்கடவு குழாய் அளவை பெரிது படுத்த வலியுறுத்தி கிராம மக்கள் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், 1,045 குளம், குட்டைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதில் நல்லி செட்டிபாளையத்தில் உள்ள 12 ஏக்கர் பரப்பளவு குளத்தில் உள்ள அத்திக்கடவு திட்ட குழாயை பெரிது படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த ஓராண்டாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் குழாய் பெரிது படுத்தப்படவில்லை.
இந்நிலையில் குளத்தை ஒட்டி உள்ள ஏர் வால்வில் உடைப்பு ஏற்பட்டு இக்குளத்திற்கு தண்ணீர் செல்கிறது.
ஏர் வால்வில் இருந்து தண்ணீர் கசிந்து செல்வதை தடுப்பதற்கு நேற்று காலை அத்திக்கடவு திட்ட செயற்பொறியாளர் அப்புசாமி தலைமையில், உதவி பொறியாளர்கள் நேற்று நல்லி செட்டிபாளையம் வந்தனர்.
ஏர் வால்வில் உடைப்பை சரி செய்ய முயன்றனர். ஆனால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். '20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த குளம் தற்போது நிரம்பி வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
12 ஏக்கர் பரப்பளவு உள்ள குளத்துக்கு வெறும் ஒன்றேகால் இன்ச் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இது போதாது. எனவே ஐந்து இன்ச் குழாய் பதிக்கும் வரை ஏர் வால்வில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யக்கூடாது,' என்றனர்.
அதிகாரிகள் நீண்ட நேரம் சமாதானம் தெரிவித்தும் பயனில்லை. இதையடுத்து குழாய் உடைப்பை சரி செய்யாமலே அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
மீண்டும் அதிகாரிகள் வரும் வாய்ப்பு உள்ளதால் மக்கள் மாலை வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குளக்கரையில் உணவு சமைத்து உண்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.

