/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராமங்களில் நிரந்தர குடிநீர் தட்டுப்பாடு: கலெக்டர் கவனிப்பாரா?
/
கிராமங்களில் நிரந்தர குடிநீர் தட்டுப்பாடு: கலெக்டர் கவனிப்பாரா?
கிராமங்களில் நிரந்தர குடிநீர் தட்டுப்பாடு: கலெக்டர் கவனிப்பாரா?
கிராமங்களில் நிரந்தர குடிநீர் தட்டுப்பாடு: கலெக்டர் கவனிப்பாரா?
ADDED : ஜன 31, 2024 11:08 PM
குடிமங்கலம்- குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றிய கிராமங்களில், கூட்டுக்குடிநீர் திட்ட வினியோகத்தில் நிலவி வரும் குளறுபடிகளுக்கு திருப்பூர் கலெக்டர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
குடிமங்கலம் ஒன்றியத்தில், 23; மடத்துக்குளத்தில், 11 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களுக்கு, திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்த ஒன்றியங்களுக்கு, புதிதாக குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், குடிநீர் தட்டுப்பாடு குறையவில்லை. குடிமங்கலத்தில் திட்டத்தின் கடைக்கோடி கிராமங்களான அடிவள்ளி, பெரியபட்டி, வீதம்பட்டி, வேலுார் உள்ளிட்ட குடிநீர் தட்டுப்பாடு நிரந்தரமாக உள்ளது. குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி ஊராட்சி, ஒன்றிய நிர்வாகிகள் போராடியும் பலனில்லை.
மடத்துக்குளம் ஒன்றியம், துங்காவி ஊராட்சியில், ஓராண்டுக்கும் மேலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டத்தில், உடையார்பாளையம் நீர் உந்து நிலையத்தில், அடிக்கடி மோட்டார் பழுதடைந்து பிரச்னை ஏற்படுகிறது.
இதனால், ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல், போராடி வருகின்றனர். பல முறை குடிநீர் வடிகால் வாரியத்திடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குடிநீருக்காக அடிக்கடி மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், தீர்வுதான் கிடைக்கவில்லை. இந்தாண்டு கோடை வெயிலின் தாக்கம் முன்னதாகவே துவங்கியுள்ள நிலையில் கூட்டுக்குடிநீர் திட்டங்களில் நிலவும் பிரச்னைகளுக்கு, உடுமலையில் முகாமிட்டுள்ள திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரு ஒன்றியங்களை சேர்ந்த கிராம மக்களும் எதிர்பார்த்துள்ளனர்.