/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை ஓரம் எண்ணெய் குழாய்களை பதிக்க மனு
/
சாலை ஓரம் எண்ணெய் குழாய்களை பதிக்க மனு
ADDED : மார் 21, 2025 11:00 PM
சூலுார்; விளை நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்க கூடாது; சாலை ஓரமாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க கோரி, விவசாயிகள் மனு அளித்தனர்.
ஐ.டி.பி.எல்., நிறுவனத்தின் சார்பில் இருகூரில் இருந்து முத்தூர் வரை, 70 கி.மீ., தூரத்துக்கு, விளை நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் பணி நடந்தது.
விவசாயிகளின் எதிர்ப்பால், பணி நிறுத்தப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டத்தில், இத்திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள், மாற்று வழியில் குழாய் பதிக்க கோரி, கடந்த, 100 நாட்களுக்கு மேலாக காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்படும் விவசாயிகள் அமைப்பு சார்பில், கோவை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
அதில், கோவை மாவட்டம் இருகூரில் இருந்து, கர்நாடக மாநிலம் தேவனஹந்தி வரை, 320 கி.மீ., தூரத்துக்கு எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை ஐ.டி.பி.எல்., நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
மற்ற இடங்களில் ரோட்டின் ஓரமாக குழாய் பதிக்கும் அந்நிறுவனம், இருகூர் முதல் முத்தூர் வரை, 70 கி.மீ., தூரத்துக்கு விளைநிலங்களில் குழாய் பதிக்கின்றனர். இதனால், 5 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்படுவர். பெட்ரோலியத்துறை அமைச்சர், அதிகாரிகளிடத்தில் சாலை ஓரமாக குழாய் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக்கோரி மனு அளித்துள்ளோம். அதனால், எங்கள் கோரிக்கையை மத்திய, மாநில அரசிடம் வலியுறுத்தி, சாலை ஓரமாக குழாய் பதித்து, எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.