ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை எஸ்.பி., பாலாஜி சரவணன் அறிவுரைப்படி, டி.எஸ்.பி., மரியமுத்து மேற்பார்வையில், பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார், கோபாலபுரம் சோதனைச்சாவடியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர். அதில், ரேஷன் அரிசி இருப்பதை கண்டறிந்தனர். வாகனத்தில் வந்தவரிடம் விசாரித்த போது, சூளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன், 42, என்றும், இருசக்கர வாகனங்களில், ரேஷன் அரிசியை வாங்கி வந்து, சரக்கு வாகனத்தில் கேரளாவுக்கு கடத்திச்சென்று, மலப்புரத்தில் உள்ள மளிகைக்கடைகள், சிறுவியாபாரிகளுக்கு கள்ள சந்தையில் விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், 1,500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன், தொடர் ரேஷன் அரிசி கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டதால், மாவட்ட கலெக்டர், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
ஆனால், ஆலோசனை குழு முன் ஆஜரானதால், குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், மீண்டும் அரிசி கடத்தலில் ஈடுபட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
இரும்பு தடுப்பு திருடிய 6 பேர் கைது
ஆனைமலை அருகே, தாத்துார் - பெரியபோது ரோட்டில், குளத்துப்புதுார் வளைவில் விபத்து நடக்காமல் இருக்க, 120 மீட்டர் நீளத்துக்கு இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டு இருந்தது. இதில், நேற்றுமுன்தினம், 60 மீட்டர் நீளத்துக்கு இருந்த இரும்பு தடுப்பை அடையாளம் தெரியாத மர்நபர்கள் திருடிச்சென்றனர்.
இது குறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில், ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். கேமராவில் பதிவான வாகன எண்ணைக்கொண்டு திருட்டில் ஈடுபட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'இரும்பு தடுப்பை, சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த கிருபாகரன்,28, அழகேஷ், 18, விக்னேஸ்வரன், 27, ஸ்ரீஜித், 29, சூரியபிரகாஷ், 23, புதுக்கோட்டையைச்சேர்ந்த சுரேஷ் பாரதி, 23 ஆகியோர் திருடியுள்ளனர்.
அதில், சுரேஷ் பாரதி என்பவர், நெடுஞ்சாலைத்துறையில் உள்ள போர்டுகள், இரும்பு தடுப்பை கொண்டு வந்து கொடுத்தால், சம்பளம் கொடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவர்கள் திருடிச்சென்று புதுக்கோட்டையில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது,' என்றனர்.
ஆழியாறில் ஒருவர் கொலை
ஆழியாறு பூங்கா இருசக்கர வாகன நிறுத்தப்பகுதியில், ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக ஆழியாறு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு வந்து ஆழியாறு போலீசார் விசாரணை செய்து மனநிலை பாதிக்கப்பட்ட நபரை கைது செய்தனர்.
ஆழியாறு போலீசார் கூறியதாவது:
புதுக்கோட்டை அருகே பொன்னமராவதி நகரப்பட்டி, சொக்கநாதன்பட்டியைச்சேர்ந்த தேவராஜ், 37. இவர், கடந்த ஒரு வாரமாக காலிபாட்டில்களை சேகரித்து விற்பனை செய்து வசித்து வந்தார்.
நேற்றுமுன்தினம் இரவு, ஆழியாறு பூங்கா தனியார் ேஹாட்டல் முன், மதுபோதையில் துாங்கியுள்ளார். இந்நிலையில், நான்கு ஆண்டுகளாக பூங்கா பகுதியில் சுற்றித்திரியும் வடமாநிலத்தைச் சேர்ந்த வாய் பேச முடியாத, மனநிலை பாதிக்கப்பட்ட ஜாகீர், 50, அங்கிருந்து வெளியேறுமாறு தேவராஜ்க்கு சைகை காட்டியுள்ளார்.
அவர் எழுந்து செல்லாததால், அருகே கிடந்த கல்லை எடுத்து தலையில் அடித்து கொலை செய்தார். அவரது உடலை அங்கு இருந்து இழுத்துச்சென்று, இருசக்கர வாகன பகுதியில் குப்பையை குவித்து மூடி வைத்து சென்றார்.
இது குறித்து விசாரணை செய்த போது, தேவராஜை கொலை செய்ததாக, ஜாகீர் சைகையில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரை கைது விசாரிக்கிறோம். இவ்வாறு, கூறினர்.
பெண்ணிடம் செயின் பறிப்பு
கோவை, ஈச்சனாரியை சேர்ந்தவர் தெய்வநாயகி, 51. இவரது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால், தனது கணவர் செல்வரத்தினத்துடன், இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி, ஜமீன் களத்தூர் சென்று அம்மாவை பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது, பொள்ளாச்சி --- கோவை ரோட்டில், கிணத்துக்கடவு அருகே உள்ள கிட்ஸ் பார்க் பள்ளி அருகே சென்ற போது, பின் தொடர்ந்து அடையாளம் தெரியாத வாகனத்தில் வந்த இருவர், தெய்வநாயகி கழுத்தில் அணிந்து இருந்த, ஐந்து சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர்.
இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு, தலைமறைவான இருவரை தேடுகின்றனர்.