மொபைல்போன் திருடியவர் கைது பொள்ளாச்சி அருகே, ஆச்சிப் பட்டியில் உள்ள தனியார் பள்ளியில், கடந்த, 18ம் தேதி, அலுவலக கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, அலுவலக மேஜை தாழ்ப்பாள் உடைந்து கிடந்தது. அதில், இருந்த இரண்டு மொபைல்போன்கள் மாயமாகி இருந்தது. இதுகுறித்து, பள்ளி சார்பில், பொள்ளாச்சி தாலுகா போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. விசாரணை மேற்கொண்ட போலீசார், மொபைல்போன் திருடியதாக, கோவை வெள்ளலுாரை சேர்ந்த வீரபத்திரன்,56, என்பவரை கைது செய்தனர். பி.ஏ.பி., கால்வாயில் தவறி விழுந்தவர் பலி
உடுமலை அரசு கல்லுாரி பகுதியில் உள்ள பி.ஏ.பி., கால்வாய்க்கு, உடுமலை, ராமசாமி நகர் சாரதாமணி லே-அவுட்டை சேர்ந்த செந்தில்முருகன்,50, சென்றுள்ளார். எதிர்பராத விதமாக கால்வாயில் தவறி விழுந்தார். கால்வாயில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால், நீரில் அடித்துச்செல்லப்பட்டார். இதுகுறித்து, தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற, உடுமலை தீயணைப்பு வீரர்கள், உடுமலை வெஞ்சமடை அருகே, அவரது சடலத்தை மீட்டனர். உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
குட்கா பொருட்களை பதுக்கியவர் கைது
உடுமலை, மலையாண்டிகவுண்டனுார் - கண்ணமநாயக்கனுார் ரோட்டில், பழைய இரும்பு குடோன் பகுதியில், தடை செய்யபட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, எஸ்.பி., தனிப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சம்பவ இடத்தில், உடுமலை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அங்கிருந்த, தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்கள், 295 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, திருநெல்வேலி, அய்யன் குளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன், 42, என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
'கள்' விற்றவர் கைது
கோட்டூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பொங்காளியூர் தனியார் தோட்டம் அருகே அரசு அனுமதியின்றி கள் விற்பதை கண்டறிந்தனர். அதன்பேரில், வேடசந்துார் பகுதியைச் சேர்ந்த சக்திவேல், 55, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 10 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.
போதை வஸ்து விற்றவர் கைது
ஆனைமலை போலீசார், போதை வஸ்துகள் விற்பனைக் கண்டறிந்து தடுக்க, அவ்வப்போது, கடைகள் தோறும் ஆய்வு நடத்தி வருகின்றனர். அவ்வகையில், நேற்றுமுன்தினம் ஆய்வு நடத்தியபோது, மளிகைக் கடை ஒன்றில், ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட போதை வஸ்துகளை பதுக்கி வைத்து, விற்பனை செய்வதைக் கண்டறிந்தனர்.
அதன்பேரில், ஒடையகுளம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ், 58, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 2,176 ரூபாய் மதிப்பிலான போதை வஸ்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.