கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை
நெகமம், செட்டிபுதுரை சேர்ந்தவர் திரு வேங்கடம் , 51, முறுக்கு வியாபாரி. இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதை சரி செய்ய வெளியில் கடன் பெற்றார்.
கடனை சரியாக செலுத்த முடியாததால் மன உளைச்சலில் இருந்தவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தொழிலாளியை தாக்கியஇருவர் மீது வழக்கு
ஆனைமலை அருகே, கோட்டூரை சேர்ந்த தேங்காய் உரிக்கும் தொழிலாளி ராஜ்குமார்,25, மனைவி கஸ்துாரி சிங்காநல்லுாரில் உள்ள அம்மா வீட்டில் உள்ளார். இந்நிலையில், மனைவியை பார்க்க சென்ற ராஜ்குமார், கெட்டிமல்லன்புதுார் பிரிவு அருகே நண்பர்களான பிரவின், கிரண் ஆகியோரை சந்தித்துள்ளார். குடிபோதையில் இருந்த கிரணை பைக்கில் அழைத்து சென்று, சிங்காநல்லுாரில் உள்ள அவரது வீட்டில் இறக்கிவிட்டுள்ளார். கிரண் குடிபோதையில் இருப்பதை கண்ட அவரது அப்பா சிவசாமி, மாமா பிரபு ஆகியோர் ராஜ்குமாரை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியுள்ளனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ராஜ்குமார், பிரபு, சிவசாமி மீது கொடுத்த புகாரின் பேரில், ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மனவேதனையில் இருந்தபெண் தற்கொலை
ஆனைமலை அருகே, திவான்சாபு துாரை சேர்ந்த விவசாயி பகவதி,77, அவரது மனைவி ருக்மணி,64. இவர்கள், கடந்த, 2016ம் ஆண்டு பூமியை மகனுக்கு எழுதி கொடுத்துள்ளனர். அதன்பின், மகன் கவனிக்காத நிலையில், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என கணவரிடம் அடிக்கடி மனவேதனையில் கூறியுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாட்டு சாலையில் சாணி பவுடர் கரைசலை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரை உறவினர்கள் மீட்டு, அம்பராம்பாளையம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முதலுதவி சிகிச்சைக்கு பின், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், ருக்மணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வீட்டில் தூக்கிட்டுபெண் தற்கொலை
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த விமல், 21, இவரது மனைவி சஞ்சு, 18. இருவரும் நெகமம் பகுதியில் உள்ள தனியார் காயர் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த சஞ்சு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.