சட்டவிரோதமாக மது விற்றோர் கைது
காந்திஜெயந்தியையொட்டி நேற்று முன்தினம் மதுக்கடைகள் விடுமுறை விடப்பட்டன. இதனையடுத்து கள்ள சந்தையில் மது விற்பனை செய்வதை தடுக்க, போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
வால்பாறை இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், மார்க்கெட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, சோலையாறு எஸ்டேட் மூன்றாம் பிரிவை சேர்ந்த ராமன்குட்டி, 65, என்பவர்,மறைவான இடத்தில் 320 மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
* கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில் நேற்று மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப் அருகே கோவையைச் சேர்ந்த கார்த்தி, 37, மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த கோவிந்தராஜ், 37, ஆகியோர்களிடம் இருந்து, 21 மது பாட்டில்கள் மற்றும் 450 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
* முள்ளுப்பாடி ரயில்வே கேட்டு அருகே மேலூரைச் சேர்ந்த வெங்கடேஷ், 25, என்பவரிடமிருந்து, 18 மது பாட்டில்கள் மற்றும் 400 ரூபாய் பணமும், முள்ளுப்பாடி அரசு மதுபான டாஸ்மாக் கடை அருகே, வடக்கிபாளையத்தைச் சேர்ந்த கணேசன், 38, மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த விக்ரம், 23, ஆகிய இருவரிடமும் இருந்து, 51 மது பாட்டில்கள் மற்றும் 27,600 ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
* நெகமம், சேரிபாளையத்தை சேர்ந்த கருப்புசாமி, 41, இவர் அதே பகுதியில் உள்ள குட்டை அருகே கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தார். போலீசார், இவரிடமிருந்து, 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மூதாட்டியை கொன்றவர் கைது
பொள்ளாச்சி அருகே கோபாலபுரம் நெடும்பாறையை சேர்ந்த பட்டீஸ்வரிக்கும், 80, கேரளா மாநிலம் மூங்கில்மடையை சேர்ந்த கோவிந்தராஜ், 40 என்பவருக்கும் இடையே கோபாலபுரத்தில் பிரச்னை ஏற்பட்டது.
அதில் கோபமடைந்த கோவிந்தராஜ், மூதாட்டியை கல்லால் அடித்து கொலை செய்தார். பட்டீஸ்வரியை கொலை செய்தவர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அவரை கைது செய்த தாலுகா போலீசார், கீழ்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.
மாடு திருடியவர் கைது
பொள்ளாச்சி அருகே ஜோதிநகர், 'பி' காலனியை சேர்ந்தவர் கோடீஸ்வரி, 37. இவர், பால் வியாபாரம் செய்து வருகிறார்.ஜோதிநகர் பகுதியில் தனக்கு சொந்தமான மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். கடந்த மாதம், 19ம் தேதி மேய்ச்சலுக்காக அனுப்பிய மாடு ஒன்று காணவில்லை. இது குறித்து கிழக்கு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில், கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருடப்பட்ட மாட்டினை கண்டறிந்தனர். மாட்டை விற்பனை செய்த பொள்ளாச்சி எஸ்.சந்திராபுரம் வெங்கடேஷ்,37 என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.