/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசியல் கட்சியினர் கொடிக் கம்பங்கள் அகற்றம்; அதிரடியை துவக்கியது மாநகராட்சி நிர்வாகம்
/
அரசியல் கட்சியினர் கொடிக் கம்பங்கள் அகற்றம்; அதிரடியை துவக்கியது மாநகராட்சி நிர்வாகம்
அரசியல் கட்சியினர் கொடிக் கம்பங்கள் அகற்றம்; அதிரடியை துவக்கியது மாநகராட்சி நிர்வாகம்
அரசியல் கட்சியினர் கொடிக் கம்பங்கள் அகற்றம்; அதிரடியை துவக்கியது மாநகராட்சி நிர்வாகம்
ADDED : ஏப் 23, 2025 06:44 AM

கோவை : உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து, கோவையில் அரசியல் கட்சி கொடிக் கம்பங்களை அகற்றும் நடவடிக்கையை மாநகராட்சி துவங்கியுள்ளது.
தமிழகத்தில் அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு, கம்பம் வைத்து கொடி ஏற்றி வருகின்றனர். ரோடுகளை ஒட்டி வைக்கப்பட்டிருக்கும் கம்பங்களால், வாகன ஓட்டிகளுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு, விபத்துகளும் ஏற்படுகின்றன. தவிர, கட்சியினர், அமைப்பினரிடையே கொடிக்கம்பங்கள் வைத்தல், உடைத்தல் போன்ற காரணங்களால் மோதல்களும் நடக்கின்றன.
இந்நிலையில், தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித்துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஜாதி மதம் ரீதியிலான கொடிக்கம்பங்களையும் அகற்ற, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, கோவை மாநகராட்சி பகுதிகளில் கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கையை நகரமைப்பு பிரிவினர் துவக்கியுள்ளனர். மத்திய மண்டலத்தில் திருச்சி ரோடு, கோவை அரசு கலைக் கல்லுாரி ரோடு உள்ளிட்ட இடங்களில், 49 கம்பங்கள், வடக்கில் சரவணம்பட்டி, துடியலுார் பகுதிகளில் 46, மேற்கில் பூசாரிபாளையம், சீரநாயக்கன்பாளையம் உள்ளிட்ட இடங்களில், 22 கம்பங்கள் அகற்றப்பட்டன.
தவிர, கிழக்கு மண்டலத்தில் சிங்காநல்லுார், சுங்கம் உள்ளிட்ட இடங்களில், 71, தெற்கு மண்டலத்தில், 27 கம்பங்கள் என, ஐந்து மண்டலங்களிலும், 215 கொடிக்கம்பங்கள் ஒரே நாளில் அகற்றப்பட்டுள்ளன.
மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் கூறுகையில், 'உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று அரசியல் கட்சியினர், அமைப்பினர் தாங்களாகவே கொடிக்கம்பங்களை அகற்றிக்கொள்வது நல்லது. இல்லையெனில், மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்படும். இன்னும் ஒரு வாரத்துக்குள் அனைத்து கம்பங்களும் அகற்றப்படும்' என்றனர்.