/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புறநகரில் பொங்கல் விழா போட்டிகள்: பொது மக்கள் உற்சாகம்
/
புறநகரில் பொங்கல் விழா போட்டிகள்: பொது மக்கள் உற்சாகம்
புறநகரில் பொங்கல் விழா போட்டிகள்: பொது மக்கள் உற்சாகம்
புறநகரில் பொங்கல் விழா போட்டிகள்: பொது மக்கள் உற்சாகம்
ADDED : ஜன 14, 2025 10:14 PM

அன்னுார்:
அன்னுார் வட்டாரத்தில், பொங்கல் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
வடக்கலூரில் அமரர் ரங்கசாமி ஆசிரியர் நினைவாக 25ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி பொங்கலை முன்னிட்டு நடந்தது. வடக்கலூர் சிறுவர் கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பொது பொங்கல் வைக்கப்பட்டது. போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்ற பலூன் ஊதுதல், உறியடித்தல், குதிரைவண்டி ரேஸ், இசை நாற்காலி ஆகிய போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு இன்ஸ்பெக்டர் செல்வம் பரிசு வழங்கினார்.
அன்னுார் ஏ.எம்.காலனியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பொங்கல் விழா நடந்தது. பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், ஓவியப்போட்டி, உறியடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இதில் வாலிபர் சங்க கிளை செயலாளர் ஹரி, துணை செயலாளர் உசேன், நிர்வாகிகள் அரவிந்த், அல்லா பக்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அன்னுார் நகர திமுக சார்பில் பழைய பஸ் ஸ்டாண்டுவளாகத்தில் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் தலைமையில், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
கரியாம்பாளையம் ஊராட்சி, கிருஷ்ண கவுண்டன் புதூரில், கோலப்போட்டி நடந்தது. இதில் 3டி கோலம் உள்பட பல்வேறு கோலங்களை வரைந்து பெண்கள் அசத்தினர். சிறுவர், சிறுமியருக்கு, பிஸ்கட் கடித்தல், சாக்கு ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. அன்னுார் மன்னீஸ்வரர் கோவில், கரி வரதராஜ பெருமாள் கோவில், மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில், குமரன் குன்று கல்யாணசுப்பிரமணியசாமி கோவில், பிள்ளையப்பம்பாளையம் செல்வநாயகி அம்மன் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
மேட்டுப்பாளையம்
கோவை மாவட்டம் காரமடை போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அப்போது காரமடை போலீசார் ஒரே மாதிரியான கலரில் வேட்டி, சட்டை அணிந்து விழாவை கொண்டாடினர். இந்த சமத்துவ பொங்கல் விழாவில், அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. போலீசார் பலரும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதே போல் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் வரை, மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., அதியமான், இன்ஸ்பெக்டர் சின்ன காமணன் ஆகியோர் ரேக்ளா வண்டியில் சென்று பொங்கல் விழாவை கொண்டாடினர்.
----சமத்துவ பொங்கல்
காரமடை அடுத்த பில்லூர் வனப்பகுதியில், 20க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இந்த ஆதிவாசி மக்களுக்கு தோண்டை மலைவாழ் கிராமத்தில், சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவுக்கு டி.ஆர்.எஸ்., சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். பொங்கல் வைத்து அனைத்து ஆதிவாசி மக்களுக்கு, இனிப்புடன் பொங்கல் வழங்கப்பட்டது.
மேலும் ஆண்களுக்கு வேஷ்டியும், பெண்களுக்கு சேலையும், சிறுவர்களுக்கு விளையாட்டு சாதனங்களும், குடும்பத்தினருக்கு ஐந்து கிலோ அரிசி பையும் வழங்கப்பட்டன. இந்த விழாவில் ஏராளமான ஆதிவாசி மக்கள் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகரில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை புனித செல்வி வரவேற்றார். புதுப்பானையில் அரிசி இட்டு, பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கி வரும் பொழுது, விழாவில் பங்கேற்ற பெற்றோர்களும், மாணவர்களும், ஆசிரியர்களும் 'பொங்கலோ பொங்கல்' என்று குலவையிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
விழாவில் நகராட்சி ஊழியர் ஜெயராமன், பொங்கல் விழா குறித்து மாணவர்களுக்கும் விளக்கி கூறினார். தமிழ் சங்க நிர்வாகி மணி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்களை வழங்கினார். விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியை உமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஆசிரியை அமல சிந்தியா நன்றி கூறினார்.
சூலூர்
சூலூர், கருமத்தம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில், பல்வேறு அமைப்புகள் மற்றும் இளைஞர் குழுவினர் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர். சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் பொங்கலை ஒட்டி விளையாட்டு போட்டிகள், கோலப்போட்டி, கயிறு இழுத்தல், இளவட்ட கல் தூக்குதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. டி.எஸ்.பி., தங்க ராமன், இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாத்துரை மற்றும் போலீசார் குடும்பத்துடன் பங்கேற்றனர். ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்தன. இதேபோல், கருமத்தம்பட்டி ஸ்டேஷனில் சம்ததுவ பொங்கல் விழா நடந்தது. இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் பங்கேற்றனர். ஓயிலாட்டம், கும்மியாட்டம் உற்சாகமாக நடந்தது. நீலம்பூரில் இளைஞர் அமைப்பினர் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கினர்.
சூலூர் பொங்கல் விழா குழு சார்பில், பல்வேறு போட்டிகள், குறும்படம், குறு நாடகம் உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டன.