/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் பொங்கல் விழா: கோலாகல கொண்டாட்டம்
/
கோவையில் பொங்கல் விழா: கோலாகல கொண்டாட்டம்
ADDED : ஜன 15, 2024 11:01 PM
கோவை;சிங்காநல்லுாரில், 100 மண் பானைகளில் பொங்கல் வைத்தும், கோலப்போட்டிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுடனும், சமத்துவ பொங்கல் நேற்று களைகட்டியது.
பொங்கல் திருநாளையொட்டி சிங்காநல்லுார், உப்பிலிபாளையம் உட்பட பல்வேறு இடங்களில் கட்சியினர், பொதுமக்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மாநகராட்சி, 58வது வார்டு கே.பி.ஆர்., லே-அவுட் பகுதியில் தி.மு.க., மற்றும் அண்ணா படிப்பகம் சார்பில், 100 மண் பானைகளில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.
61வது வார்டு கள்ளிமடையில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் திடலில், கலைமான் விளையாட்டு கழகம் மற்றும் சேகுவேரா கபடி அணி சார்பில், சிறுவர்களுக்கான ஓட்டப்பந்தயம், தவளை ஓட்டம் உட்பட, பல்வேறு போட்டிகள் நடந்தன. இன்றும் நடக்கின்றன.
அப்பகுதி தி.மு.க., சார்பிலும், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு நிறைவில் பரிசுகள் வழங்கப்பட்டன. உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள மைதானத்திலும், பொங்கல் வைத்து போட்டிகள் நடத்தப்பட்டன.
மாநகரின் பல்வேறு பகுதிகளிலும், சிலம்பாட்டம் மற்றும் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளுடன், பொங்கல் விழா களைகட்டியது.
பீளமேடு, காந்தி மாநகர் பகுதியில் உள்ள அரவணைக்கும் அன்பு இல்லத்தில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுடன் இணைந்து, உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையை சேர்ந்தவர்கள், மதநல்லிணக்க பொங்கல் விழா கொண்டாடினர்.