/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குண்டும் குழியுமான தார் சாலை; நோயாளிகள் அவதி
/
குண்டும் குழியுமான தார் சாலை; நோயாளிகள் அவதி
ADDED : டிச 02, 2025 06:47 AM

பெ.நா.பாளையம்: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட உருமாண்டம்பாளையத்தில் குண்டும், குழியுமாக உள்ள தார் சாலையை செப்பனிட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட, 14வது வார்டு உருமாண்டம்பாளையம் உழைப்பாளர் வீதியில் இருந்து வெள்ளக்கிணறு செல்லும் ரோடு, வெள்ளக்கிணறு பேரூராட்சியாக இருந்த போது, சுமார், 17 ஆண்டுகளுக்கு முன்பு, தார் சாலை போடப்பட்டது. தற்போது, மாநகராட்சியாக தரம் உயர்ந்து, 15 ஆண்டுகள் ஆன பின்பும், புதிதாக தார் சாலை எதுவும் போடவில்லை. தற்போது இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இப்பகுதியில் தெரு விளக்குகளும் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும், இதே பகுதியில் தனியார் நிறுவனங்கள் இருப்பதால், வேலைக்கு வரும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் இரவு நேரங்களில் இப்பாதையை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து, மண் கொட்டி ரோட்டை சரி செய்தனர்.
இது குறித்து கோயம்புத்தூர் சாலைகள் பாதுகாப்பு சங்க செயலாளர் தேவேந்திரன் கூறுகையில், இச்சாலையை செப்பனிடக்கோரி பலமுறை மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்குள்ள பிரசவ வார்டுடன் கூடிய வெள்ளக்கிணறு அரசு மருத்துவமனை செல்லும் நோயாளிகள், இதே சாலையை பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது.
மேலும், அரசு பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியரும் இந்த வழியை பயன்படுத்துகின்றனர். இந்த வழியை உடனடியாக மேம்படுத்தி தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

