/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கண்கொள்ளா காட்சி'யாக கண்காட்சியை மாற்ற ஆயத்தம்
/
'கண்கொள்ளா காட்சி'யாக கண்காட்சியை மாற்ற ஆயத்தம்
ADDED : செப் 22, 2024 03:56 AM
கோவை, : கோவையில் நடக்கும் தபால் தலை சேகரிப்பு கண்காட்சியில், பள்ளி மாணவர்களை அதிகளவு பங்கேற்க செய்யும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவை மாவட்ட அளவில், தபால் தலை சேகரிப்பு கண்காட்சி, நவ., 12 மற்றும் 13ம் தேதிகளில், அவிநாசி ரோடு, சுகுணா திருமண மண்டபத்தில் நடக்கிறது.
இதற்காக வெளியிடப்பட்ட கையேட்டில், கண்காட்சியின் நேரம், பங்கு கொள்வதற்கான தகுதிகள் மற்றும் விரிவான வழிமுறைகள் இடம் பெற்றுள்ளன.
கையேடை, தபால் துறையின் பிரத்யேக வலைப்பதிவான, https://kovaipex2024.blogspot.com ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளி மாணவ, மாணவியருக்குபோட்டிகள் நடத்தி, பரிசு வழங்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோவை அஞ்சல் கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் சிவசங்கர் கூறியதாவது:
நவம்பர் மாதம் இரு நாட்கள் நடக்கும் கண்காட்சியில், 10 ஆயிரம் தலைப்பிலான தபால் தலைகள், பழைய தபால் கார்டுகள் உட்பட, தபால் சம்பந்தமான விஷயங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
பள்ளி மாணவர்களை அதிகளவில் பங்கேற்க செய்யும் வகையில், தபால் தலை கண்காட்சியின் அம்சங்கள் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ்கள், பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பள்ளி மாணவர்களுக்கு, வரைதல், கடிதம் எழுதுதல் போட்டிகள், முதற்கட்டமாக அக்., மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் போட்டிகள் நடத்துவது குறித்து, தலைமை தபால் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். தபால் துறை அலுவலர்கள் முன்னிலையில் போட்டிகள் நடத்தப்படும்.
இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு, கண்காட்சி நடக்கும் நாளான நவ., 12, 13ம் தேதிகளில், இறுதிப் போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
கண்காட்சியில், பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டுகள், ஆதார் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
கண்காட்சியில் பங்கேற்பதற்கான நுழைவு படிவத்தை, கோவை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தபால் துறையின் பிரத்யேக வலைப்பதிவில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
விபரங்களுக்கு: 0422 - 2382930. வாட்ஸ் அப்: 83007 87370.