ADDED : டிச 03, 2024 08:52 PM
பொள்ளாச்சி; ஊட்டி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பொழிவின் தாக்கம் காரணமாக, மணமேடை அலங்காரத்திற்கான பூக்களுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.
திருமண நிகழ்ச்சியின் போது, மணமேடை அலங்காரம் என்பது பிரதானமாக கருதப்படுகிறது. பணத்துக்கு ஏற்ப மணமேடை அலங்காரம் வேறுபடுகிறது. குறைந்தபட்சம், 12 ஆயிரம் ரூபாய் முதல், ஒரு லட்ச ரூபாய் வரை மேடை அலங்காரம் செய்யப்படுகிறது.
மேடை அலங்காரத்தில், அனைத்து வகை பூக்களும், தாள் பூக்களும், அலங்கார செடிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக, பொள்ளாச்சி பூ மார்க்கெட்டிற்கு, கெர்பரா, ரோஜா, கார்னிஷ், கிரிஸான்தமம், கிளாடியோலஸ், ஆர்க்கிட், துலிப், ஜிப்சம், லில்லியம் உள்ளிட்ட பல்வேறு பூக்களும் தருவிக்கப்படுகின்றன.
முகூர்த்த நாளின் போது, இந்த பூக்களின் விலை வழக்கத்துக்கு மாறாக சற்று அதிகரித்தே விற்பனையும் செய்யப்படுகிறது. தற்போது, ஊட்டி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பொழிவின் தாக்கம் காரணமாக, இவ்வகை பூக்களின் வரத்தும் சற்று பாதிக்கப்பட்டுள்ளது.
பூ வியாபாரிகள் கூறியதாவது:
திருமணத்தின்போது, ஒவ்வொரு நிகழ்வுக்கும் மரிக்கொழுந்து, மல்லிகை, ஜாதி மல்லி, ரோஜா உள்ளிட்ட வாசனை பூக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது, மேடை அலங்காரத்தின் பூக்கள் விலை அதிகரித்துள்ளது.
அவ்வகையில், பட்டன்ரோஸ் கிலோ, 200 ரூபாய்; தாஜ்மகால் ரோஸ் ஒரு கட்டு (20 எண்ணிக்கை) 200 முதல் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், கிலோ, 2 ஆயிரம் ரூபாய் வரை விற்ற மல்லி, 800 ரூபாய் வரை குறைந்துள்ளது. முகூர்த்த நாளையொட்டி பூக்களின் விலையில் மாற்றம் ஏற்படும்.
இவ்வாறு, கூறினர்.