ADDED : ஜூன் 06, 2025 11:43 PM
பெ.நா.பாளையம், ; நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பில் முதலிடம் பிடித்த ஆங்கில மற்றும் தமிழ் வழி கல்வி மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொது தேர்வில், தேர்வு எழுதிய அனைவரும், 100 சதவீதம் என, தேர்ச்சி பெற்றனர்.
இதையொட்டி இப்பள்ளியின் முன்னாள் ஆசிரியை பாலாமணி நினைவாக, அவரது கணவர் ராஜன், தமிழ் வழியில் படித்து, பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மாணவி விகாஸ்ரீக்கு, 3 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பரிசு வழங்கினார்.
இதே போல ஆங்கில வழியில் படித்து, பள்ளி அளவில் முதலிடம் பெற்ற ஹரி சுபாஷினி மாணவிக்கு ஆசிரியை பாலாமணியின் மகள் சுதா, 3 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பரிசு வழங்கினார். மாணவியர் சார்பில், அவரது பெற்றோர் ரொக்க பரிசு, கேடயம் ஆகியவற்றை பெற்றுக் கொண்டனர்.
மேலும், பள்ளிக்கு, 3 கரும்பலகைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் பிரேம்குமார், உடற்கல்வி ஆசிரியர் தனக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.