/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் இரும்புச்சத்து மாத்திரை குழந்தைகளுக்கு வழங்குவதில் சிக்கல்
/
கோவையில் இரும்புச்சத்து மாத்திரை குழந்தைகளுக்கு வழங்குவதில் சிக்கல்
கோவையில் இரும்புச்சத்து மாத்திரை குழந்தைகளுக்கு வழங்குவதில் சிக்கல்
கோவையில் இரும்புச்சத்து மாத்திரை குழந்தைகளுக்கு வழங்குவதில் சிக்கல்
ADDED : அக் 30, 2025 11:23 PM
கோவை:  அங்கன்வாடி மையங்கள் வாயிலாக, ஆறு மாதங்கள் முதல் 59 மாதங்கள் வரையுள்ள குழந்தைகளுக்கு ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் ஒரு மில்லி இரும்பு போலிக் திரவம் வழங்கப்படுகிறது. ஐந்து வயது முதல் ஒன்பது வயது வரையுள்ளவர்களுக்கும், 10 முதல் 19 வயதுள்ள சிறார்களுக்கு வாரந்தோறும் வியாழன் அன்று இரும்பு-போலிக் மாத்திரை வழங்கப்படுகிறது.
இருப்பினும், ரத்தசோகை பாதிப்பு வளர் இளம் பருவ குழந்தைகள் மத்தியிலும், கர்ப்பிணி பெண்கள் மத்தியிலும் இருப்பது அதிகரித்து காணப்படுகிறது. தாய்-சேய் கண்காணிப்பு மையம் சார்பில் கர்ப்பிணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். அதில், ரத்த சோகை பாதிப்பு காரணமாக பலர் ஹை-ரிஸ்க் பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர்.
கோவை மாவட்டத்தில் வாரந்தோறும் கொடுக்கப்படும் மாத்திரைகள் அதிகளவில் வீணடிக்கப்படுவதாக ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. பல தனியார் பள்ளிகள் இம்மாத்திரைகளை வாங்க மறுப்பதாகவும், சில தனியார் பள்ளிகள் குழந்தைகளுக்கு தருவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இத்திட்டம் ஓரளவு சரியாக செயல்படுத்தப்படுகிறது.
தனியார் பள்ளி தலைமையாசிரியை ஒருவர் கூறுகையில், 'பெற்றோர் பலர் மாத்திரைகளை வாங்க மறுக்கின்றனர். சில இடங்களில் ஒவ்வாமை ஏற்படுவதை காண்கிறோம். அதனால், எந்த குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்று நாம் கணிக்க முடியாது. அதனால், நிர்வாக தரப்பில் விருப்பம் காண்பிப்பதில்லை' என்றார்.
தாய்-சேய் கண்காணிப்பு களப்பணியாளர்கள் சிலர் கூறுகையில், 'கர்ப்பிணி பெண்கள் பலருக்கு ரத்தசோகை பிரச்னை அதிகளவில் இருப்பதை காண்கிறோம். இரும்புச்சத்து மாத்திரை வழங்கினாலும் விழிப்புணர்வு இன்றி உட்கொள்வதில்லை. ரத்தசோகையால் பிரசவ நேரத்தில் இறப்பு வரை செல்ல வாய்ப்புண்டு. 100ல் 3 முதல் 5 மகளிருக்கு ரத்தம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகிறது. பள்ளிகளில் வியாழன்தோறும் மாத்திரை வழங்கினாலும் பல பள்ளிகள் மாணவர்களுக்கு தருவதில்லை' என்றார்.
மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமியிடம் கேட்டபோது, ''பெற்றோர் அனுமதி பெற்று, குழந்தைகளுக்கு இரும்புச்சத்து மாத்திரை வழங்க அறிவுறுத்தியுள்ளோம், ''  என்றார்.

