/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சொத்து வரி உயர்வு; அபராதம் விதிப்பதில் நடந்திருப்பது என்ன? மக்கள் காட்டம்; கூட்டணி கட்சிகள் மவுனம்
/
சொத்து வரி உயர்வு; அபராதம் விதிப்பதில் நடந்திருப்பது என்ன? மக்கள் காட்டம்; கூட்டணி கட்சிகள் மவுனம்
சொத்து வரி உயர்வு; அபராதம் விதிப்பதில் நடந்திருப்பது என்ன? மக்கள் காட்டம்; கூட்டணி கட்சிகள் மவுனம்
சொத்து வரி உயர்வு; அபராதம் விதிப்பதில் நடந்திருப்பது என்ன? மக்கள் காட்டம்; கூட்டணி கட்சிகள் மவுனம்
ADDED : மே 13, 2025 06:54 AM

கோவை : கோவை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தியது, ஒரு சதவீதம் அபராதம் விதித்தது தொடர்பாக, தி.மு.க., கூட்டணி கட்சிகள், அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல், மவுனமாக இருப்பதாக, மக்கள் நினைக்கின்றனர்.
கோவை மாநகராட்சியில் ஏப்., - செப்., மற்றும் அக்., - மார்ச் என ஆறு மாதத்துக்கு ஒருமுறை சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. 2022, ஏப்., மாதம், 25 சதவீதம் முதல், 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது.
அவ்வாண்டு மே மாதம் நடந்த மாமன்ற கூட்டத்தில், 'ஆண்டுதோறும் ஆறு சதவீதம் வரி உயர்வு செய்யப்படும். அந்தந்த தவணை காலத்துக்குள் வரியினங்களை செலுத்தாவிட்டால், ஒரு சதவீதம் அபராதம் வசூலிக்கப்படும்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, 2023-24 நிதியாண்டில், ஆறு சதவீதம் சொத்து வரி உயர்த்தியிருக்க வேண்டும். லோக்சபா தேர்தல் நடந்ததால் உயர்த்தவில்லை.
தேர்தல் முடிந்த பிறகு, 2024-25 நிதியாண்டுக்கான முதல் தவணையை செப்., 30க்குள் செலுத்தவில்லை என கூறி, ஒரு சதவீதம் அபராதம் வசூலித்தது.
அக்., - மார்ச் மாதத்துக்கான இரண்டாவது தவணை சொத்து வரி செலுத்தியபோது, ஆறு சதவீதம் உயர்த்தியது.
மக்கள் கொந்தளிப்பு
இதற்கிடையே, 'ட்ரோன் சர்வே' என்கிற பெயரில், கட்டடங்கள் மறுஅளவீடு செய்யப்பட்டு, வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டன. குடியிருப்புகளில் சிறிய கடைகள் இருந்தாலும் வணிக கட்டடமாக வகை மாற்றம் செய்து, வரியை எக்குத்தப்பாக உயர்த்தியதால், பொதுமக்கள் கொந்தளித்தனர்.
இதுதொடர்பாக, கடந்த பிப்., மாதம் கோவை வந்த தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவிடம் கேள்வி எழுப்பியபோது, ''ஒரு சதவீத அபராத கட்டணம் ரத்து செய்யப்படும். 'ட்ரோன் சர்வே' நிறுத்தப்படும். இதுவரை எடுத்த கணக்கீடும் நிறுத்தி வைக்கப்படும்,'' என அறிவித்தார்.
அதில், 'ட்ரோன் சர்வே' மட்டும் உடனடியாக நிறுத்தப்பட்டது. ஏற்கனவே எடுத்த சர்வே முடிவுகளை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்து, உயர்த்தப்பட்ட சொத்து வரியே வசூலிக்கப்பட்டது. 2024-25 நிதியாண்டுக்கான இரண்டாவது தவணை வரித்தொகையை மார்ச், 31க்குள் செலுத்தாதவர்களுக்கு, ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
அரசாணைக்கு காத்திருப்பு
'அபராதக் கட்டணம் ரத்து குறித்த அமைச்சரின் அறிவிப்பு பற்றி, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'சட்டசபையில் மசோதா நிறைவேற்றி, அரசாணையாக வெளியிட்டால் மட்டுமே ரத்து செய்ய முடியும்' என்றனர்.
சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரிலும், அபராத வரியை முழுமையாக ரத்து செய்யவில்லை. ஒரு சதவீதத்தில் இருந்து அரை சதவீதமாக குறைப்பதாக, மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
தமிழக அரசு நினைத்திருந்தால், ஆண்டுதோறும் விதிக்கப்படும் ஆறு சதவீத வரி உயர்வையும், ஒரு சதவீத அபராத கட்டணத்தையும், முழுமையாக ரத்து செய்து, மசோதா நிறைவேற்றி இருக்கலாம். அதனால், கடந்த நிதியாண்டை போல், நடப்பாண்டும் அக்., முதல் மீண்டும் ஆறு சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படுமோ என்கிற அச்சம், மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.