/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டை மறித்து ஆர்ப்பாட்டம்; மக்கள் அதிருப்தி; பஸ் ஸ்டாண்ட் அருகே நெரிசலோ நெரிசல்
/
ரோட்டை மறித்து ஆர்ப்பாட்டம்; மக்கள் அதிருப்தி; பஸ் ஸ்டாண்ட் அருகே நெரிசலோ நெரிசல்
ரோட்டை மறித்து ஆர்ப்பாட்டம்; மக்கள் அதிருப்தி; பஸ் ஸ்டாண்ட் அருகே நெரிசலோ நெரிசல்
ரோட்டை மறித்து ஆர்ப்பாட்டம்; மக்கள் அதிருப்தி; பஸ் ஸ்டாண்ட் அருகே நெரிசலோ நெரிசல்
UPDATED : டிச 25, 2025 08:12 AM
ADDED : டிச 25, 2025 06:13 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அலுவலகம் முன், தி.மு.க., கூட்டணி சார்பில் ரோட்டை மறித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் என்ற பெயரை, மத்திய அரசு மாற்றி, திட்டத்தை முடக்கும் சட்டத்தை கொண்டு வந்ததற்கும், அதற்கு உறுதுணையாக இருக்கும் அ.தி.மு.க.வை கண்டித்தும், தி.மு.க., கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அலுவலகம் முன் நேற்று நடந்தது.
இதற்காக, பாலக்காடு - பொள்ளாச்சி ரோட்டில், வடக்கு ஒன்றிய அலுவலகம் முன், ரோட்டை மறித்து பெரிய அளவிலான பிளக்ஸ் வைத்து மேடை அமைக்கப்பட்டது. இவ்வழியாக வாகனங்கள் செல்லாமல் மாற்று வழித்தடத்தில் திருப்பிவிடப்பட்டன. நகராட்சி அலுவலகம் அருகே இருந்து, வெங்கடேசா காலனி வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தினால், ஒரு புறம் ரோட்டை மறித்ததால் நகரில் நெரிசல் அதிகரித்தது. பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை என நகரமே ஸ்தம்பித்ததால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கிய இடத்தில் மட்டுமே ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும். மற்ற கட்சிகள் போராட்டம் நடத்தும் போது, விதிமுறைகளை வகுக்கும் போலீசார், ஆளுங்கட்சி போராட்டம் என்பதால், விதிமுறைகளை பின்பற்றவில்லை.
போராட்டம் நடத்துவதற்கு ஒன்றிய அலுவலகம் முன் அல்லது போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் போராட்டம் நடத்த அனுமதிக்கலாம்.ஆனால், அவ்வாறு செய்யாமல், ரோட்டை மறித்து போராட்டம் நடத்த அனுமதி கொடுத்துள்ளனர்.
அவசர சிகிச்சைக்கு செல்வோர் கூட திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இனியாவது போலீசார், அரசுத்துறை அதிகாரிகள், ஆளுங்கட்சி, மற்ற கட்சிகள் என பார்க்காமல் பாரபட்சமின்றி ஒரே மாதிரியான விதிகளை வகுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

