ADDED : ஆக 03, 2025 09:28 PM

அன்னுார்; நிலம் கையகப்படுத்த நெடுஞ்சாலைத்துறை வைத்த எல்லை கற்களை வியாபாரிகள் அகற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்னுார், கடை வீதியில், சாலை அகலப்படுத்துவதற்கு, நிலம் கையகப்படுத்த நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக அளவீடு செய்து மார்க்கிங் செய்யும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெறுகிறது.
இது குறித்து, நெடுஞ்சாலைத் துறையை, பொது மக்கள் தொடர்பு கொண்ட போது, நிலம் கையகப்படுத்தும் முன்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும். நோட்டீஸ் அனுப்பப்பட்டு, கருத்து கேட்கப்பட்டு, அதன் பிறகு இழப்பீடு தொகை தெரிவிக்கப்பட்டு கையகப்படுத்தும் பணி நடைபெறும் என்று தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கையகப்படுத்த திட்டமிட்ட இடத்தில் எல்லைக் கற்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜமாத் நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டனர். கைகாட்டியில் நெடுஞ்சாலைத்துறை வைத்த எல்லை கற்களை அங்கிருந்து அகற்றினர்.
நெடுஞ்சாலை துறையை கண்டித்து கோஷம் எழுப்பினர். 'முறையாக அனைவருக்கும் நோட்டீஸ் அளித்து, தகவல் தெரிவித்து அதன் பிறகு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். அதிக அளவில் வணிக நிறுவனங்கள் பாதிக்காத படி சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
நிலம் கையகப்படுத்தினால் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படும்,' என்றனர்.
நெடுஞ்சாலைத்துறையின் எல்லைக் கற்களை அகற்றியதால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.